
``அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நூறு சதவீதம் தேர்ச்சிப் பெற்றுவிட்டார்'' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வுசெய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை உயர்நீதிமன்றம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்லத் தடைவிதித்துள்ளது. இதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போனை பாதுகாக்கும்வகையில் செல்போன் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு செல்போனுக்கு 5 ரூபாய் கட்டணம். இதேபோல் திருச்செந்தூர் பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வரும் வயோதிக, மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு வசதியாக இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெருந்திட்ட மதிப்பீட்டுப்பணிகள் நடக்கிறது.
இந்த பணிகள் 2024 ஆம் ஆண்டு முடிவடையும். அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டார். இனிவரும் காலங்களில் முதல்வரின் எண்ணங்களை அவர் நிறைவேற்றுவார். திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கக் கட்டப்பட்டுவரும் யாத்திரை நிவாஸ் நவம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குவரும்” என்றார்.