வெறுப்பை வளர்க்கும் மோடியின் பேச்சு... என்னாகும் தேசம்?

தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி
தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தபோது, அவை ஆளும் பாஜகவுக்கு ஆதாயமாக இல்லை என்ற கணிப்புகள் உலா வந்தன. உடனே, பாஜக தலைவர்கள் பலரும் தங்களது தேர்தல் பிரச்சார உத்திகளை வீரியமாக மாற்றினார்கள். அதில் பிரதமர் மோடியின் பேச்சு நாட்டு மக்களை துணுக்குறச் செய்துள்ளன.

தேசத்தின் பெரும்பான்மை மக்களை தங்கள் பக்கம் ஒருங்கிணைக்கும் நோக்கில், சிறுபான்மை தரப்பினருக்கு எதிரான தகிக்கும் பிரச்சாரத்தை மோடி தொடங்கி வைக்க, அதனை பாஜகவின் அடுத்தக்கட்ட தலைவர்கள் பின்தொடர்கின்றனர்.

வேருக்கு பங்கம் சேர்க்கும் வெறுப்பு!

தேர்தல் அரசியலின் மிகவும் அப்பட்டமான கட்டம் அரங்கேறி இருக்கிறது. காங்கிரஸ் முகமூடியை கிழிக்கும் முயற்சியில் பாஜக அம்பலப்பட்டு நிற்கிறது. தேசத்தின் வளர்ச்சி அதற்கு ஆதாரமான பன்மைத்துவம் ஆகியவற்றுக்குப் பங்கம் சேர்ப்பது போன்று, அதிர்ச்சிக்குரிய பேச்சுகள் பாஜக மேடைகளில் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

இஸ்லாமிய சிறுபான்மையினர் மீது வெறுப்பை கக்குவதன் மூலம், அதன் எதிர் திசையில் பெரும்பான்மை மக்களான இந்துக்களின் வாக்குகளை ஈர்க்கலாம் என்ற தேர்தல் அரசியல் கணக்கை பாஜக கையில் எடுத்திருக்கிறது.

இதனால் எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்புகள் தேசத்துக்கு நேரிடும், கட்சிகளின் பெருந்தலைவர்களால் மக்கள் மத்தியில் விதைக்கப்படும் துவேசமான கருத்துகள் நாட்டின் வளர்ச்சியை எவ்வாறு கூறுபோடும், மக்கள் மனங்களில் படியும் விரோத நிழல் அவர்களின் தலைமுறைகளுக்கு கடத்தப்படும்போது எதிர்கால சமூகம் எவ்வாறு சுமூகமாக இழக்கும்... என்பதையெல்லாம் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல.

மோடி மேடைதோறும் முழங்கும் தேசத்தின் வளர்ச்சி, ஒளிமயமான எதிர்காலம், மக்களின் நல்வாழ்வு போன்ற கனவுகளை கெடுக்கும் வகையில், அவரே தேர்தல் பிரச்சார களங்களில் விஷத்தை பரப்பி வருகிறார். தேர்தல் வெற்றி என்ற ஒற்றை நோக்கோடு துடிக்கும் சாமானிய அரசியல்வாதியாக அவர் உருமாறியிருக்கிறார்.

தலைவன் எவ்வழியோ அதையே இதர பாஜக தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தேர்தல் பிரச்சார களங்களில் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். மிச்சமிருக்கும் பல கட்ட வாக்குப்பதிவுகளில் இவை எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற திகிலை மோடியின் வெறுப்புப் பேச்சு இந்த தேர்தலில் உருவாக்கி இருக்கிறது.

இஸ்லாமியருடன் மோடி
இஸ்லாமியருடன் மோடி

சிறுபான்மை ஓட்டுகள் வேண்டாம்

பெரும்பான்மையினர் வாக்குகள் கிடைத்தால் போதும்; குறைந்த சதவீதம் கொண்ட சிறுபான்மையினரை அதற்காக புறக்கணித்து விடலாம் என்று பாஜக தனது சுயரூபத்தை வெளிக்காட்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்டத்துக்கு முன்பாக துவண்டுக்கிடந்த பாஜகவுக்கு, அயோத்தி ரத யாத்திரையின் மூலமாக பெரும் எழுச்சியை ஊட்டினார் அத்வானி. அந்த யாத்திரையில் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்பட்ட பிரச்சாரம் பாஜக எதிர்பார்த்தது போன்றே பெரும்பான்மை மக்களை ஒரு புள்ளியில் குவித்து வாக்குகளாக திரளச் செய்தது.

இப்போது அதே அயோத்தி ராமர் கோயில் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டதை முன்வைத்தும், ’அது பாஜகவின் அரசியல் அஜெண்டா’ என அயோத்தி கோயிலை புறக்கணித்த எதிர்க்கட்சிகளை தாக்கும் போக்கில், இஸ்லாமியருக்கு எதிராக பதற்றமூட்டும் அரசியல் பிரச்சாரத்தை பாஜக கையாள்கிறது.

”காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கானதாக இல்லை; பாகிஸ்தான் தேர்தலுக்கானது” என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா போன்றவர்கள் முதல் தாக்குதலை தொடங்கினார்கள். சுதந்திரத்துக்கு முந்தைய முஸ்லிம் லீக் கட்சியின் தொனி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தென்படுகிறது என்றும் பாஜக குற்றம்சாட்ட ஆரம்பித்தது.

இவற்றின் உச்சமாக ராஜஸ்தான் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் முழங்கிய பிரதமர் மோடி, ”காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துக்களை கணக்கெடுத்து அவற்றைப் பறித்து ஊடுருவல்காரர்கள் மற்றும் அதிக குழந்தைகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்துவிடும். நமது தாய்மார்களின் தாலி தங்கத்தை கூட அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்” என்றெல்லாம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மேற்கோள்காட்டி முழங்கினார். இதற்கு இன்னொரு ஆதாரம் என்ற பெயரில் காங்கிரஸின் பிரதமராக மன்மோகன்சிங் 18 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியதை இன்னொரு கோணத்தில் சித்தரித்தார் மோடி.

பெரும்பான்மைவாதம் காப்பாற்றுமா?

அவ்வளவுதான். பாஜகவின் பிரச்சார மேடைகள் பற்றிக்கொண்டன. பாஜக ஐடி பிரிவு தலைவரான அமித் மாளவியா போன்றவர்களே வழக்கமாக இம்மாதிரி எதிர்க்கட்சியினரின் பேச்சுக்களில் விபரீத அர்த்தத்தை தோண்டியெடுத்தும், வீடியோக்களை வெட்டி ஒட்டியும் சமூக ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்புவார்கள்.

சமூக ஊடகங்களுக்கு அப்பால் அரசியல் மேடைகளிலும், சொந்தக் கட்சியினரை குதூகலிக்கச் செய்ய எதிர்க்கட்சியினரை தரமிழந்து தாக்குவது, மலிவான மற்றும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பது போன்றவைக்கு என தனி பேச்சாளர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் அக்கட்சியின் தலைமை அவர்களின் பேச்சுக்களில் இருந்து தங்களை விலக்கியே வைத்திருக்கும். அவர்களின் பேச்சுக்கள் சர்ச்சையாகும்போது, திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்று கட்சியிலிருந்து கட்டம் கட்டுவது, கைது செய்வது போன்ற கண்துடைப்புகளை பிரயோகித்து, சிறிய இடைவெளியில் அவர்களை மீண்டும் மேடையேற்றி அழகு பார்க்கும்.

அயோத்தி ராமர் கோயில் - பிரதமர் மோடி
அயோத்தி ராமர் கோயில் - பிரதமர் மோடி

ஆனால் கட்சியின் தலைவர்கள் பதவிக்கு வந்ததும் தங்களை பொறுப்பானவர்களாக முன்னிறுத்துவார்கள். மாநில முதல்வர், தேசத்தின் பிரதமர் போன்ற உச்ச பதவிகளை அலங்கரிப்பவர்கள், அடிப்படையில் தனிப்பட்ட அரசியல் மற்றும் சித்தாந்தங்களை கொண்டவர்கள் என்ற போதும், சத்தியப்பிரமாணத்துக்கு உட்பட்டு அனைவருக்குமான ஆட்சியாளராக தங்களை முன்னிறுத்துவார்கள். தங்களுக்கு வாக்களிக்காதவர்களையும் அரவணைத்து ஆட்சியை கொண்டு செல்வார்கள். பொறுப்பும், முதிர்ச்சியும் கொண்டவர்களாக அல்லது அப்படி காட்டிக்கொள்பவர்களாக மாறிப்போவார்கள். அவையே ஒரு அரசியல் தலைவர், அனைவருக்குமான ஆட்சியை நல்கும் மக்கள் தலைவராக பரிணமிப்பதன் அடையாளம். ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் புடம்போட்ட வாஜ்பாய் போன்ற பாஜக முன்னோடிகள் அப்படித்தான் அனைவருக்குமான தலைவராக மக்கள் மனதில் இன்றைக்கும் நிற்கிறார்கள்.

ஆனால் மூன்றாம் முறையாக ஆட்சியேறத் துடிக்கும் பிரதமர் மோடிக்கு, அது குறித்தான பதற்றமே அவரையும் பாஜகவையும் நிதானமிழக்கச் செய்திருக்கிறது. 10 ஆண்டு கால ஆட்சியின் பெருமைகள், சாதனைகள் உள்ளிட்டவற்றை சொல்லி வாக்குக்கேட்பதற்குப் பதிலாக, தேய்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியை அதன் நூற்றாண்டு பின்னணியிலான சொதப்பல்களை அடையாளம் காட்டுவதன் மூலமாக வாக்கு சேகரிக்க முயல்கிறார் மோடி.

அதிருப்தி வாக்குகள் பாஜகவுக்கு எதிராக மாறிவிடுமோ, தோல்வியின் தொனியோ தொங்கு நாடாளுமன்றமோ அமைந்தால் தனது தலைமைக்கு ஊறுவிளைக்குமோ என்ற அச்சத்தில் மோடியும் குமைய ஆரம்பித்திருக்கிறார். இதன் விளைவாக பாஜகவின் ஆதி உத்தியான பெரும்பான்மை வாதத்தை கையில் எடுத்திருக்கிறார். இந்த பெரும்பான்மைவாதம் வட இந்தியாவில் மோடி மற்றும் பாஜகவை கரைசேர்க்க உதவக்கூடும் என்பதை தேர்தல் அரசியலில் புடம்போட்ட மோடி, அமித் ஷா போன்றவர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.

தேசத்தின் வளர்ச்சி என்னாகும்?

மோடி எதிர்பார்த்தவாறே அவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மதத்தை முன்னிறுத்தியும், மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் வகையிலும் அமைந்த மோடியின் பேச்சை இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. காங்கிரஸ் முதல் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா வரை தேர்தல் விதிமீறல்களில் பாய்ந்து நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம், மோடி விவகாரத்தில் மட்டும் பாஜக ஆட்சியில் குற்றச்சாட்டுக்கு ஆளான சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் சேர்ந்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆன்லைன் புகார்கள் குவிந்த பிறகு, பெயருக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நாடெங்கும் பாஜகவினரின் தேர்தல் விதிமீறல்களில் வழக்குகள் சிலவற்றையும் பதிந்திருக்கிறது. மறந்தும் மோடியின் பக்கம் ஆணையம் திரும்பவே இல்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மட்டுமல்ல; மோடியின் தற்போதைய பொறுப்பற்ற பேச்சு அவர் இதுநாள் வரை கட்டமைத்த தனக்கான விஷ்வகுரு பிம்பத்தையும் சிதிலமாக்கி உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வளர்ச்சியின் நாயகனாக பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளராக அறிமுகமான மோடி, மற்றுமொரு பிரதமர் வேட்பாளர் கோதாவில் தனது முகமூடி விலக்கி சாமானிய அரசியல்வாதியாக சுயரூபத்தை காட்டியிருக்கிறார். கோத்ரா கலவரம் உள்ளிட்டவற்றின் மூலமாக குஜராத்தில் பெரும்பான்மைவாதத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அவரது பழைய அரசியல் தொனி மீண்டும் வெளிப்பட்டு வாக்காளர்களை முகம்சுளிக்கச் செய்திருக்கிறது.

மக்களின் ஒருசாரர் மத்தியில் பதற்றத்தையும், அவர்களது இருப்பை கேள்விக்குளாக்கியும், பெரும்பான்மையினரிடமிருந்து அந்நியப்படுத்தியும் பாஜக முன்வைக்கும் அதன் பழகிய அரசியலால், அது முழங்கும் தேசத்தின் வளர்ச்சி எப்படி முழுமையடையும்?

சிறுபான்மையினர், பட்டியல் மற்றும் பழங்குடியினர் பெயரைச் சொல்லி தேர்தலுக்குத் தேர்தல் அவர்களது வாக்குகளை இழுக்கும் அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று தங்களை முன்னிறுத்தும் பாஜக, பெரும்பான்மைவாதம் பேசுவதால் மட்டுமே மாற்றத்துக்கான மக்கள் எதிர்பார்ப்புகளை எப்படி ஈடு செய்யும்?

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை சமூகங்களை முன்வைத்து நடத்தும் ஆதாய அரசியலில், அவை அளித்த தேர்தல் உறுதிமொழிகள் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அந்த தரப்பு மக்களை முழுமையாக சென்று சேரவே இல்லை. இன்னமும் வாழ்க்கை தரத்திலும், சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற முடியாது தவிக்கும் அவர்களின் அவல நிலையே அதற்கு உதாரணம்.

இதற்கு எதிர்த்திசையில் பெரும்பான்மைவாதம் பேசும் பாஜக, அந்த பெரும்பான்மை மக்களுக்கான தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு உணர்ச்சிபூர்வமாக அவர்களை தங்கள் பக்கம் திருப்பப்பார்க்கிறது. ராமர் கோயிலுக்கு அப்பால், பெரும்பான்மை மக்களுக்கு பாஜக உறுதியளித்த வேலைவாய்ப்பு, விலைவாசி, வேளாண்மை சார்ந்த உறுதிமொழிகளை முற்றிலுமாக மறந்திருக்கிறது.

அவை மீண்டும் மக்கள் மனதில் எழ வாய்ப்புத் தராது, பாகிஸ்தான், மதவெறுப்பு, சனாதனம், எதிர்க்கட்சிகளின் துவேஷம் என உணர்வுபூர்வமாக வாக்காளர்களை கொந்தளிக்கச் செய்கிறது. மக்கள் மனங்களின் இடுக்குகளில் ஒளிந்திருந்த வெறுப்புணர்வை வளர்த்து விடுகிறது. மூன்றாம் முறை என்றில்லை இனி பலமுறை பாஜக ஆட்சியில் அமர்ந்தாலும், அது முயன்றாலும் தீர்க்க முடியாத வெறுப்புணர்வை சுயநலத்தோடு தற்போது தூண்டி வருகிறது. அரசியல் கட்சிகள் வறட்டு மந்தைகளாக பாவிக்கும் வகையில் நாட்டு மக்களின் போக்கு இருக்கும் வரை இவை தொடரவே செய்யும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in