பாஜகவிடம் பணிந்துவிட்டதா திமுக?

தடம்மாறும் தமிழக அரசியல் தட்பவெட்பம்!
பிரதமருடனான சந்திப்பில்...
பிரதமருடனான சந்திப்பில்...

சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கோடிட்டு, பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்கிறது என்ற கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்திருந்தது. இது அறிவாலயத்துக்குள்ளும் எதிரொலித்ததால்தானோ என்னவோ, விசிக தலைவர் திருமாவளவனின் மணி விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எந்தக்காலத்திலும், எந்தச்சூழலிலும் திமுகவின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக்கொடுக்கமாட்டான்” என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டிய அரசியல் கட்டாயத்துக்கு ஆளானார்.

‘’பா.ஜ.க. - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது” என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் முதல்வர். இதனால் திமுக கூட்டணிக் கட்சிகள் ஓரளவுக்கு பதற்றம் தெளிந்திருந்தாலும் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்பது தான் யதார்த்தம். திமுக அரசு மெல்ல மெல்ல ஆர்எஸ்எஸ்சின் வழியிலேயே செல்ல ஆரம்பித்து விட்டதுடன் பாஜகவிடம் முற்றிலுமாக பணிந்துபோய் விட்டது என்று ஆணித்தரமாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஏற்கெனவே தருமபுர ஆதீனத்தின் பல்லக்கு விவகாரம், பிரியாணித் திருவிழா, இல்லம்தோறும் கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்கள் நியமனம் ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ்காரர்களின் தலையீடு இருந்தததாகவும், அதற்கு திமுக அரசு இணங்கிப்போனதாகவும் சொல்லப்பட்டது. தற்போது தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக மணிகண்டபூபதியை நியமித்தது இந்த வாதத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தப் பொறுப்புக்கு தகுதியான பலர் இருக்க, தீவிர ஆர்எஸ்எஸ் காரர் என சொல்லப்படும் ரங்கராஜ் பாண்டேயின் கூட்டாளியான மணிகண்ட பூபதியை நியமித்திருப்பது அனைத்து மட்டத்திலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமா மணிவிழாவில்...
திருமா மணிவிழாவில்...

இந்த இடத்துக்கு பூபதியை தேர்வுசெய்ய வேண்டும் என்பதில் தமிழக ஆளுநரும் அதிக ஆர்வம் காட்டியதாகச் சொல்கிறார்கள். இந்த நியமனத்தை விமர்சித்து, ‘தமிழ் மக்களிடையே மதப்பிரிவினையைத் தூண்டிவிட்டு அம்பலப்பட்டு நிற்கும் பாண்டேயின் சாணக்யா டிவியின் பங்குதாரரும் மதப்பிரிவினைவாத கோட்பாட்டாளருமான மணிகண்ட பூபதியை தெர்ந்தெடுப்பதற்காகத்தான் ’தன்னம்பிக்கையை விதைக்கும் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்’ என்று டாக்டர் கலாம் அவர்களால் பாராட்டப்பட்ட நான் விண்ணப்பித்திருந்தபோதும், என்னை நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்தீர்களா?’ என்று முதல்வருக்கு திறந்தமடல் எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் திருஞானம்.

பள்ளி மாணவர்களுக்கான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை, கல்வி மாத இதழ்கள் ஆகியவற்றின் ஆசிரியரும், சன் நியூஸ் சேனலின் முன்னாள் சேனல் தலைமை நிர்வாகியுமாக இருந்தவர் இந்த திருஞானம். இருப்பினும் இவரின் விமர்சனத்தை திமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, ‘ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியை கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலராக நியமித்ததை விமர்சிக்காதீர்கள். அவரின் செயல்பாட்டைப் பார்த்துவிட்டு விமர்சியுங்கள்’ என்று சப்பைக்கட்டுக் கட்டி இருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

’’சகோதரர் திருமா கிஞ்சிற்றும் கவலைப்பட வேண்டாம். எந்தக்காலத்திலும், எந்தச்சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை இந்த ஸ்டாலின் விட்டுக் கொடுக்கமாட்டான். திருமா கூறுவதுபோல், குறைந்தபட்ச சமரசமும் செய்துகொள்ளமாட்டான்” என்று திருமாவளவன் மணிவிழாவில் உரத்துப்பேசிய ஸ்டாலின், இன்னொரு பக்கம் ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை இம்முறை புறக்கணிக்கவில்லை என்பதையும் ஒப்பிட வேண்டியிருக்கிறது. நீட் மசோதாவை காரணம்காட்டி, கடந்த குடியரசு நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி புறக்கணிப்பு செய்த பிறகுதான் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நேரடியாக அழைத்து ஆலோசனை செய்தார். ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமனம் செய்தார். புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் இப்படி முரண்பட்டு நிற்பதால் தான், இனி துணைவேந்தர்களை முதல்வரே நியமனம் செய்யலாம் என்று திமுக அரசு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது. வழக்கம்போல் அதையும் கிடப்பில் வைத்துள்ளார் ஆளுநர்.

ஆளுநருடன் இத்தனை கசப்புகள் இருந்தாலும் சுதந்திர தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டு அன்புகலந்து அளவளாவினார் முதல்வர். ஆளுநருடனான இறுக்கத்தை போக்கிக்கொள்ளும் விதமாக இந்தச் சந்திப்பைப் பயன்படுத்த நினைத்தார் முதல்வர். ஆனாலும் அதற்கு அடுத்த நாளே ஆளுநர் தனது வழக்கமான வேலையைக் காட்டினார். ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த நாளில் இங்கே மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து தனது அதிகாரத்தை நிலைநாட்டினார் அவர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவியும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகமும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகரும் ஆளுநரால் நியமிக்கப் பட்டனர். இதையும் திமுக சீரியஸாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

பிரதமரை சந்தித்தபோது...
பிரதமரை சந்தித்தபோது...

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் மூலமாகவும், அண்ணமாலை மூலமாகவும் திமுக அரசுக்கு கடும் நெருக்கடிகள் தரப்பட்டு வருகிறது. அதை சமாளிக்கவே பிரதமரை ஸ்டாலின் சந்திக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள். உடல்நலக் குறைவு காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைக்க நேரில் செல்லமுடியாத ஸ்டாலின், நன்றி சொல்வதற்காக டெல்லி சென்றதை மோடிக்கு எதிரான தேசிய அரசியல்வாதிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான அமலாக்கத் துறை விசாரணை ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், “அமைச்சர் செந்தில்பாலாஜியை விரைவில் அமலாக்கத்துறை விசாரிக்கும்” என்று அண்ணாமலை திமுகவை நாளும் திகிலடையவைத்துக்கொண்டே இருக்கிறார்.

“மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்று முழங்கியிருக்கின்றீர்கள். உங்கள் அடக்குமுறையைக்கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும் அதை எதிர்க்க பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக இருக்கின்றனர். அவர்கள் பின்னால் நானும் எனது மூத்த தலைவர்களும் இருக்கிறோம் என்ற உண்மையை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம்’ என்ற அண்ணாமலையின் பகிங்கிர மிரட்டலுக்கு ஸ்டாலின் மட்டுமல்ல திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் கூட இன்னமும் எதிர்வினையாற்றாததும் கவனிக்கத்தக்கது.

ஆளுநர் தேநீர் விருந்தில்...
ஆளுநர் தேநீர் விருந்தில்...

தமிழகத்தில் வெறுப்பரசியலையும் எதிர்ப்பரசியலையும் கையிலெடுத்திருக்கும் பாஜக, அத்துமீறல், அராஜகம் ஆகியவற்றின் மூலம் காலூன்றத் துடிப்பதாக விமர்சனங்கள் வெடிக்கின்றன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க முடியாமல் திமுக அரசு மிகுந்த தயக்கம் காட்டி வருகிறது. பெரும் குற்றப் பின்னணி உள்ளவர்களையும் எவ்வித கேள்விகேட்பாடும் இல்லாமல் பாஜகவில் சேர்த்து அவர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முக்கிய பொறுப்புகளை வாரி வழங்குகிறார் அண்ணாமலை. அப்படியான அதிரடிப் புள்ளிகள் எல்லாம் தங்கள் பாணியில் கள அரசியல் செய்து திமுக அரசை திக்குமுக்காட வைக்கிறார்கள். இப்படியானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஏனோ அஞ்சுகிறது திமுக அரசு.

PICHUMANI K

தருமபுரி அருகே பாப்பாரப்பட்டியில் ஆகஸ்ட் 11-ல், தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரத அன்னை சிலைக்கு எவ்வித முன் அனுமதியும் பெறாமல் மாலை அணிவிக்கச்சென்ற பாஜகவினர், நினைவாலயத்தின் பூட்டை உடைத்து அராஜகமாக உள்ளே நுழைந்தனர். இதில் ஈடுபட்ட பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல், மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசிய பாஜகவினரை களத்திலேயே கைதுசெய்திருக்க வேண்டும். ஆனால், திமுகவினர் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட பிறகு தான் பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இரண்டு நாள் கழித்தே ஸ்டாலின் கண்டன அறிக்கை தந்தார்.

அதேநாளில் நடந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் தேர்வில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்குப் பதிலாக திவாகரன் என்ற நபர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தை பாஜகவுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக எடுக்க திமுகவில் யாருக்கும் துணிச்சல் இல்லை.

ஆகஸ்ட் 13-ல், பொள்ளாச்சி – கோவை சாலையில் உரிய அனுமதியுடன் கேரளா சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பாஜகவினர் கற்களை வீசி, அச்சுறுத்தி மடக்கினர். இதுகுறித்து லாரி ஓட்டுநர் புகார் அளித்தும் பாஜகவினரை சமாதானம் பேசி பத்திரமாக அனுப்பிவிட்டது போலீஸ். இதற்கு அடுத்த நாள் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோயில் கோபுரத்தின் உச்சியில் பாஜகவினர் தேசியக்கொடியை ஏற்றினர். கோயில் நிர்வாகம் இது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குக்கூட பதிவு செய்யாமல் பம்மிவிட்டது போலீஸ். திமுகவினரும் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் ஒரு மாதமாகியும் உண்மையையை வெளியில் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறது போலீஸ். காரணம், பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமார் ஓர் ஆர்எஸ்எஸ்காரர். இதையெல்லாம் வரிசையாக அடுக்கும் அரசியல் பார்வையாளர்கள், “மொத்தத்தில் பாஜகவின் அதிகார பலத்துக்கு முன்னால் ஆளும் திமுக அரசு அடக்கி வாசிக்கிறது” என்கிறார்கள்.

இதையெல்லாம் உறுதியாக மறுக்கும் திமுக தரப்போ, ‘’திருமா மணி விழாவிலேயே இதற்கெல்லாம் எங்கள் தலைவர் பதில் சொல்லிவிட்டார். ‘உறவுக்குக் கைகொடுப்போம்... உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதை மனதில் வைத்து, தமிழக முதல்வர் என்ற முறையில் ஒன்றிய அரசிடம் இணக்கமாக இருந்து தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களைப் பெறவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த விதத்தில் ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, திமுகவுக்கும் பாஜகவுக்கும் அல்ல. திமுகவின் கொள்கைக்கும், பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது” என்று எங்கள் தலைவர் திட்டவட்டமாக சொல்லிவிட்ட பிறகும் இந்த வாதம் அர்த்தமில்லாதது” என்கிறது.

திமுகவினர் இப்படிச் சொன்னாலும் ஈபிஎஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எப்படியெல்லாம் உருட்டி மிரட்டி காரியம் சாதித்துக் கொண்டதோ பாஜக அதைவிட ஒருபடி மேலாகவே இப்போது சாதித்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல... காவல் நிலையங்களிலும் இப்போது காவித் துண்டுக்கு தனி மரியாதை இருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் திமுகவினர் அடக்கிவாசிக் கிறார்கள் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in