சுரேந்திரன்
சுரேந்திரன்

அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா பாஜக மாநிலத் தலைவர்?

மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் தன் மகனுக்கு பணி வாங்கிக் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன். இவ்விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் போராடவும் ஆயத்தம் ஆகிவருகின்றன.

கேரள மாநில பாஜக தலைவராக இருப்பவர் சுரேந்திரன். இவரது மகன் ஹரி கிருஷ்ணன் ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமாகும். கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக ஹரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அந்த மையத்தில் இதே பணிக்கு ஏற்கெனவே 48 பேர் தேர்வெழுதிக் காத்திருப்பதாகவும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இதனிடையே இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையம், “சில மாதங்களுக்கு முன்பு நடந்த பணி நியமனம் இப்போது ஏன் சர்ச்சையாகிறது எனத் தெரியவில்லை. விதிமுறைகளைப் பின்பற்றியே ஹரி கிருஷ்ணனை தேர்ந்தெடுத்தோம். பொதுவாக ஒரு நேர்காணலின் போது அந்தப் பதவிக்கு வந்தவருக்கு தகுதியிருக்கிறதா என்றுதான் பார்ப்போம். குடும்பப் பின்னணி பற்றிய கேள்வி இடம்பெறுவதும் இல்லை. அதனால் அவரது குடும்பப் பின்னணியும் அப்போது தெரியாது”எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்தத் தலைவர்கள் கேரளம் வந்திருக்கும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே என் பெயரை கெடுக்க வேண்டும் என அவதூறுப் பிரச்சாரம் செய்கின்றனர் என இதனை மறுத்திருக்கும் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன், இந்த செய்தியை பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in