தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்கிறதா?

அண்ணாமலை
அண்ணாமலை

ஒரு காலத்தில் கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் மட்டுமே வலுவான இயக்கமாக இருந்தது பாஜக. ஆனால் இப்போதெல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என பாஜக அறிவித்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் கொடிபிடித்துக் கொண்டு ஆட்கள் திரள்கிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சி தாங்கள் தான் என அதிமுக அடித்துச் சொன்னாலும் களத்தில் என்னவோ பாஜகதான் இப்போது அடித்து ஆடுகிறது. அதிகாரிகள், ஆளும் கட்சிக்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ... பாஜகவினரைக் கண்டால் பம்முகிறார்கள். உள்கட்சி குழப்பத்தில் அதிமுக சிக்கித்தவிப்பதும் தமிழக பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

நேரடிக் களத்தில் இல்லாமல் சமூகவலைதளங்களிலும் பாஜக ஆதரவு பிரச்சாரங்கள் பின்னி பெடலெடுக்கின்றன. அப்படியானால் கேஸ், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு தொடங்கி, வேலையின்மைப் பிரச்சினை வரை மத்திய அரசி சார்ந்த எதுவுமே மக்களை பாதிக்கவில்லையா? பெரியார் மண்... திராவிட மண் என்ற முட்டுக்கட்டைகளை எல்லாம் தாண்டி தமிழகத்தில் பாஜக வேகமாக வேரூன்றுகிறதா?

திராவிட இயக்கங்கள் பேசிப்பேசித்தான் கட்சியை வளர்த்தன. அந்தப் பேச்சுத்தான் காங்கிரஸை வீழ்த்தவும் செய்தது. ஆனால், இப்போது அந்தப் பேச்செல்லாம் மலையேறிவிட்டன. இப்போதெல்லாம் மைக்கின்றி மேடையின்றி மக்கள் கூட்டமின்றி இருந்த இடத்தில் இருந்தபடியே சமூகவலைதளப் பிரச்சாரங்கள் மூலமே, தாங்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிவிடுகிறார்கள். அந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகளைவிட பாஜக எட்டுக்கால் பாய்ச்சலில் முன்னே ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த சர்ச்சைப் பேச்சாகட்டும்... அமைச்சர் பொன்முடியின் பெண்களின் இலவசப் பேருந்து பயணம் தொடர்பான பேச்சாகட்டும் அனைத்தையும் பாஜகவின் வலைதளப் பிரச்சாரத்தால் சாமானியனுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டது. அதிமுகவினர் கூட இந்த விஷயத்தில் இரண்டாம் இடம் தான்.

சமூகவலைதளங்களில் பாஜகவினர் மட்டுமல்லாது அந்தக் கட்சியைச் சாராத பலரும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாமெல்லாம் இந்து, தேசபக்தர்கள் என்ற பிரச்சாரத்தின் மூலம் இவர்களை எல்லாம் தங்களுக்காகப் பேசவைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.

திமுக முதற்கொண்டு அனைத்துக் கட்சிகளிலுமே இந்துக்கள் தான் முக்கிய பொறுப்புகளில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் யாரும் இந்துக்களுக்காகப் பேசுவதில்லை. ஆனால், இந்துக்களுக்காகப் பேசும் ஒரே அரசியல் இயக்கமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் பாஜக, தனது பிரச்சாரங்களால் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் இந்துக்களையும் சிந்திக்கவைக்கிறது. சனாதன எதிர்ப்பு என்று முழங்குவோர் மட்டுமே பாஜகவின் இந்து ஆதரவுப் பிரச்சாரத்தால் சலனப்படாமல் இருக்கிறார்கள்.

ரமணா படத்தில் ஊழலுக்கு எதிராக மாணவர் படை ஒன்றை யாருக்கும் தெரியாமல் கட்டமைப்பார் நாயகன் விஜயகாந்த். அதுபோல, ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒவ்வொரு ஊரிலும் பாஜக பின்புலம் இல்லாமலேயே ஊடுருவி இருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் ‘சாகா’ என்ற பெயரில் கிராமங்கள் வரைக்கும் பயிற்சி வகுப்புகள் இன்றைக்கும் நடக்கின்றன. தற்காப்புக் கலையான சிலம்பம் தொடங்கி யோகா வரைக்கும் பல விஷயங்கள் அதில் போதிக்கப்படுகின்றன. இந்த வகுப்புகளில் சேரும் இளம் பிள்ளைகள், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை தங்களின் கலாசார காவலர்களாகப் பார்க்கிறார்கள். இந்தப் பார்வையே அவர்களில் பலரை ஆர்எஸ்எஸ் அனுதாபிகளாகவும் அப்படியே பாஜகவின் பிரச்சாரகர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

கேரளத்தின் கல்லூரிகளில் எஸ்எஃப்ஐ போன்ற மாணவர் அமைப்புகள் வலுவாக உள்ளன. அது மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு. அதேபோல் தமிழகத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு இப்போது வேகமாக வேரூன்றி வருகிறது. இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் இன்னொரு முகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியாது.

ஏபிவிபி மாத்திரமல்ல... இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபை, இந்து முன்னணி, இந்து கோயில் கூட்டமைப்பு, விஸ்வ இந்து பரிஷத் என ஆர்எஸ்எஸ்ஸின் பல்வேறு அவதாரங்கள் பாஜகவுக்காக பல்வேறு செயல்திட்டத்துடன் களப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் வெளியில் தெரியாது.

இதுபற்றி நம்மிடம் பேசிய திமுகவின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், “2072-ல் என்ன நடக்க வேண்டுமோ அதற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் இப்போதே முன்னெடுக்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள்... யாரை ஸ்லீப்பர் செல்லாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அத்தனை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரணாப் முகர்ஜியே ஆர்எஸ்எஸ்காரர் என்பது நமக்கு இப்போது தானே தெரிகிறது. இதுபோல மற்ற கட்சிகளில் யாரை வேண்டுமானாலும் முகம் மாற்றி உட்காரவைத்திருக்கலாம். ஏன், எங்கள் கட்சியைச் சார்ந்த அமைச்சர்களில்கூட ஆர்எஸ்எஸ் காரர்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

இந்து வாங்கு என்னும் ஒற்றை அச்சை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு பாஜக தமிழகத்தில் வேகமாக முன்னகர்வதை திமுகவும் உணர்ந்தே இருக்கிறது. அதனால்தான், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் ஸ்டாலின் படத்தைப் போட்டு தைரியமாக தீபாவளி வாழ்த்துச் சொல்கிறார்கள். தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழக்கமில்லாத ஸ்டாலினால் பிடிஆரைக் கண்டிக்க முடியவில்லை. அப்படிக் கண்டித்தால் அதைப் பிடித்துக்கொண்டு பாஜக வம்பு வளர்க்கும் என்பது அவருக்குத் தெரியும். அதனால் அமைதிகாக்கிறார்.

திமுகவின் செயல்பாடுகளை விமர்சிப்பதால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது என்பதையும் முழுமையாக ஏற்கமுடியாது. ஏனென்றால், அண்மை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவர்களாக வந்த ஒவ்வொருவருமே தங்களின் செயல்பாடுகளால் கட்சியின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறார்கள். அதற்குக் காரணம், கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பது. ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவின் தோழனாக அதன் தோளில் உட்கார்ந்து சவாரி செய்து நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டது.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு திமுக ஒரு காரணம் என்றால் அதிமுக அடுத்த காரணம். ஜெயலலிதா மரணத்தை அடுத்து திக்குத் தெரியாமல் நின்ற அந்தக் கட்சியை தந்திரமாக தனது கைக்குள் வளைத்துக் கொண்டது பாஜக. அதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கென நான்கு எம்எல்ஏ-க்களையும் பெற்றுக்கொண்டது. இப்போது அடுத்த கட்டமாக, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை மார்தட்டுகிறார்.

தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அந்தக் கட்சியைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதற்கு இதையெல்லாம் விட வேறென்ன நிகழ் சாட்சி வேண்டும்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in