போராட்டம் நடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது: முதல்வர் பினராயி விஜயன் அதிகார துஷ்பிரயோகம் செய்தாரா?

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

முதல்வருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாக முன்னாள் எம்எல்ஏ சபரிநாதன் நேற்று மாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இரவு அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டாலும் இதில் பினராயி விஜயன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டத்தின் மூலமே மக்களின் கவனத்தைக் குவிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன், போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பலவீனப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 14-ம் தேதி கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே விமானத்தில் பயணித்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் தங்கக்கடத்தல் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய பினராயி விஜயன், தன் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என திடீரென கோஷம் எழுப்பினர். இதுதொடர்பாக கண்ணூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவரும், முன்னாள் எம்எல்வுமான சபரிநாதன் முதல்வர் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவது குறித்து தகவல் கொடுத்து, போராட அனுப்பி வைத்ததாக தகவல் கசிந்தது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் வாட்ஸ் அப் குழுவில் சபரிநாதனின் இந்த போராட்ட அழைப்புப் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்ம் வைரலானது. இதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு நேற்று மாலை அழைக்கப்பட்டிருந்த சபரிநாதன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முன் ஜாமீன்கோரி சபரிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதே சர்ச்சைக்கு தூபம் போட்டது. அதிலும் சபரிநாதன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கேரள காங்கிரஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா சொப்னா
கேரளா சொப்னா

இதுகுறித்து கேரள எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “மட்டன்னூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஈ.பி.ஜெயராஜனும் அதே விமானத்தில் இருந்தார். அவர் விமானத்திற்குள் போராட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்களைக் கீழே தள்ளினார். இதில் காங்கிரஸாருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை. மோடியின் அணுகுமுறையையே போராட்டங்களை ஒடுக்குவதில் பினராயி விஜயனும் பின்பற்றுகிறார். பினராயி விஜயனின் அதிகார துஷ்பிரயோகம், எதேச்சதிகாரப் போக்கினையே இதுகாட்டுகிறது.
ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனமும் விசாரணை செய்தது. இதில் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஜெயராஜனுக்கு மூன்று வாரங்களும், போராடிய காங்கிரஸ் கட்சியினருக்கு இரண்டுவாரமும் விமானத்தில் பறக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதில் இருந்தே யார் கூடுதல் குற்றம் செய்தவர் என்பது தெளிவாகவே தெரிகிறது ”என்றார். சபரிநாதனின் மனைவி திவ்யா, கேரளத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சபரிநாதன் தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in