சட்டம் - ஒழுங்கு சரியில்லை: குமுறும் அதிமுக... குட்டை உடைக்கும் திமுக!

சட்டம் - ஒழுங்கு சரியில்லை: குமுறும் அதிமுக... குட்டை உடைக்கும் திமுக!

‘தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துவிட்டது’ என்று திமுக அரசுக்கு எதிரான விமர்சன அம்புகளை தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக. ஆனால், தங்கள் அரசின் மக்கள் போற்றும் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுக அவதூறு பரப்புவதாக ஆத்திரப்படுகிறது திமுக.

பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரையில், தமிழ்நாடு, திராவிட மாடல் மற்றும் தமிழக தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் விட்டதாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கொதித்து எழுந்தன. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அதிமுகவோ, “தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது” என்று சொல்லி பேரவையிலும் அவைக்கு வெளியிலும் ஆர்ப்பரித்தது.

அண்மைக்காலமாகவே அதிமுக தலைவர்கள் பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதிமுக மட்டுமல்லாமல், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களும் தமிழக சட்ட - ஒழுங்கு பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவருகிறார்கள். இதற்கேற்ப, ஆளுநர் உரையில், தமிழக அரசு குறிப்பிட்டிருந்த ‘அமைதிப்பூங்கா’ என்ற வார்த்தையை தவிர்த்தார் ஆளுநர் ரவி. இப்படி அதிமுக – பாஜக – ஆளுநர் என மூன்று தரப்புமே ‘சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது’ என்ற குரலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓங்கி ஒலிக்கிறார்கள்.

இது தொடர்பாக பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. நாள்தோறும் ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்ற செய்திகள் வருகின்றன. அவற்றை இந்த அரசு தடுக்க தவறிவிட்டது. திமுக நிகழ்ச்சியில் பெண் காவலருக்கு திமுகவினர் இருவர் பாலியல் தொல்லை கொடுத்தனர். அவர்கள் மீது 2 நாட்கள் கழித்தே வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் கஞ்சா, கொகைன் போன்ற போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாக வெளிநாட்டிற்கும் போதைப்பொருள் கடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன” என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ பெண் காவலர் புகார் அளித்த உடனே எஃப்ஐஆர் போடப்பட்டு, உடனடியாக புலன் விசாரணை நடத்தப்பட்டு 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் எஸ்.பி அந்தஸ்தில் இருந்த 2 பெண் போலீஸ் அதிகாரிகளே இது மாதிரி புகாரில் அலைக்கழிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சியில் குட்கா மாமூல் பெற்று போதைப்பொருள் விற்பனை புற்றுநோய் போல அதிகரித்தது. அந்த புற்றுநோயை தடுக்க திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறோம். அதிமுக ஆட்சியில் கஞ்சாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதுபற்றிய செய்திகள் வரவில்லை. இப்போது கஞ்சா மற்றும் போதைப்பொருளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து, தண்டனைகள் கொடுப்பதால் இவ்வளவு செய்திகள் வருகின்றன” என்றார்.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குற்றச்சாட்டை அதிமுக உரக்கச் சொல்வது அரசுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடா? அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம் .

“திமுக அரசு பதவியேற்ற 7-வது மாதத்தில் பேரவையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கடந்த 7 மாதத்தில் 600 கொலைகள் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டார்கள். அப்படியானால் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 கொலைகள், ஒரு நாளைக்கு 3 கொலைகள் தமிழ்நாட்டில் நடக்கிறது. தற்போது வெளியான அறிக்கையின்படி இந்த 19 மாத ஆட்சியில் 1,500 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி பார்த்தாலும் மாதம் சராசரியாக 100 கொலைகள் நடக்கிறது.

2021-ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பொக்சோ குற்றங்கள் 4,469 நடந்துள்ளது. இதே 2020-ல் அதிமுக ஆட்சியில் இந்த போக்சோ குற்றங்கள் 3,090 மட்டுமே நடந்தது. இதனை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படியே சொல்கிறேன். 2022-ல் இது இன்னமும் அதிகரித்திருக்கும். பதியப்படும் குற்றங்களே இவ்வளவு என்றால், பதியப்படாத குற்றங்கள் எவ்வளவு இருக்கும் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது.

அதுபோல தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்கில் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைது செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் முரண்பாடு உள்ளது. இதையே எடப்பாடியார் பேரவையில் குறிப்பிட்டு பேசினார்.

இதற்கெல்லாம் முதல்வர் சரியாக பதில் சொல்லவில்லை. அப்படியிருக்கையில், கஞ்சாவேட்டை 2.0, 3.0 என கலர் கலராக கதை சொல்வதால் என்ன பயன். நாகையில் திமுக கவுன்சிலர் ஒருவர் 360 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்று கைதானார். ஆனால் அடுத்த சில நாட்களில், ‘அது போதைப்பொருள் இல்லை, ஃபெர்டிலைசர்’ என்று சொல்கிறார்கள். நன்றாக கவனியுங்கள், அவர் எதையும் கடத்தவில்லை என போலீஸார் சொல்லவில்லை, போதைப் பொருளை கடத்தவில்லை என்றுதான் சொல்கிறார்கள். எனவேதான் திமுகவினருக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதாக சொல்கிறோம்.

கோவை சத்யன்
கோவை சத்யன்

தமிழகத்தில் இந்திய இறையாண்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சட்டம் - ஒழுங்கு சீர்கெடுட்டுள்ளது. உதாரணமாக, கோவை கார் குண்டு வெடிப்பினை சொல்லலாம். போலீஸார் கைகள் முற்றிலுமாக கட்டப்பட்டுள்ளது. அவர்களை சுதந்திரமாக செயல்பட திமுகவினர் அனுமதிப்பதில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒரு மாற்றுத்திறனாளி உட்பட 7 பேர் லாக்கப் மரணமடைந்துள்ளனர். இதையெல்லாம் தடுக்க கடுமையான நடவடிக்கை எதுவுமே இல்லை.

திமுகவின் சாதாரண நிர்வாகிகள் முதல் தலைமை வரைக்கும் காவல்துறையை மிரட்டுகின்றனர். பொதுமக்களை மிரட்டுகின்றனர். சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதால், தொழில்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்குச் செல்லும் 13, 14 வயது மாணவர்களுக்குக்கூட இப்போது கஞ்சா எளிதாக கிடைக்கிறது. அதிமுக ஆட்சியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கஞ்சா புழக்கம் இருந்தது. அதன்மீது தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினோம். இப்போது எந்த நடவடிக்கையும் இல்லாததால் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையே அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது” என்றார் அவர்.

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, “அதிமுகவினருக்கு அரசியல் செய்வதற்கென்று இப்போது எந்தக் களமும் இல்லாத நிலையில், இதுபோன்ற பொய்க்குற்றச்சாட்டுகளைப் பேசி அதன் மூலமாக தங்கள் இருப்பினை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் மத்திய அரசின் குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அதிமுக ஆட்சிக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 57 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளது.

கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே கஞ்சா பழக்கம் சீரழித்துள்ளது. குட்கா விவகாரம் உட்பட தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதற்காக ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே அதிமுக அழித்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு வழக்கில் மதுரை நீதிமன்ற நீதியரசர் புகழேந்தியே கஞ்சா புழக்கம் தொடர்பாக அப்போதைய அரசை கடுமையாக கண்டித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சியில் கஞ்சா ஒழிப்பு தொடர்பான ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்தார்களா என்று செய்தித்தாள்களை புரட்டி பாருங்கள்; ஒன்றுமிருக்காது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தது முதலே கஞ்சா வழக்கில் மிகத்தீவிரம் காட்டி வருகிறோம். கஞ்சா தொடர்பாக அதிமுக ஆட்சியில் ஒரு வழக்கு போடப்பட்டிருந்தால், இப்போது 2 ஆயிரம் வழக்குகள் போட்டுள்ளோம். அதைப்போல கஞ்சா விற்கக்கூடிய தொடர் குற்றவாளிகள் 57 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம். இதன்மூலமாக 2,032 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் கட்டுக்கடங்காமல் பெருகிய கஞ்சா புழக்கத்தை, இப்போது மிகத்தீவிரமாக செயல்பட்டு ஒழித்து வருகிறோம்.

தமிழன் பிரசன்னா.
தமிழன் பிரசன்னா.

இது மக்கள் நல ஆட்சி, தினம் தினம் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். 10 ஆண்டுகள் செய்யப்பட்ட தவறுகளை, சீர்கேடுகளை சரிசெய்ய சிறிதுகாலம் தேவைப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு குறித்து இப்போது பேசுகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் காவல்துறையை கைவசம் வைத்திருந்த ஈபிஎஸ், ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொன்னார். அப்படி இல்லாமல் இப்போது தமிழ்நாடு முதல்வர் காவல் துறையினருடன் அடிக்கடி ஆலோசனை செய்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் முதல்வருக்கு வரும் நற்பெயரை பொறுத்துக்கொள்ளமுடியாமல் அதிமுகவினர் இப்படி பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதிமுக, பாஜக, ஆளுநர் என மூவருமே கூட்டாகப் பேசிக்கொண்டு, ‘தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது’ என்று பேசுகிறார்கள். இவர்களின் நோக்கம் இந்த மண்ணில் சனாதனத்தை விதைத்து, பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

அண்ணா பெயர் சூட்டிய ‘தமிழ்நாடு’ என சொல்லமாட்டேன் என ஆளுநர் சொல்கிறார். அதனை பாஜகவும் வலியுறுத்துகிறது. அண்ணாவின் பெயரை பேரவையில் சொல்லாமல் தவிர்த்த ஆளுநரின் பொங்கல் விழா நிகழ்ச்சியில், அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துள்ள அதிமுக கலந்துகொள்கிறது. தமிழகத்தில் வெடித்துக் கிளம்பியுள்ள ‘தமிழ்நாடு’ பெயர் சர்ச்சை, ஆளுநரின் தமிழர் விரோத அடாவடிப்போக்கினை நீர்த்துபோகச் செய்யவே, அதிமுக இப்போது சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பொய்ப்பிரச்சாரம் செய்கிறது” என்றார்.

யார் ஆட்சியில் எத்தனை கொலை, கொள்ளைகள் நடந்தன என்று ஒப்பீட்டுப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பதைவிட, ‘எங்கள் ஆட்சியில் எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று தில்லாக காலரைத் தூக்கிவிட்டுச் சொல்லும் நிலைக்கு ஆளும்கட்சிகள் வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in