சொத்துப் பட்டியல் சொதப்பல்; அசிங்கப்பட்டாரா அண்ணாமலை?

அண்ணாமலை திமுக சொத்துப் பட்டியல் வெளியிட்ட போது...
அண்ணாமலை திமுக சொத்துப் பட்டியல் வெளியிட்ட போது...

தமிழக பாஜக தலைவராக வந்தது முதலே பல அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார் அண்ணாமலை. ஆனால், அந்த அதிரடிகள் பல நேரங்களில் அவரையே திருப்பித் தாக்கும் பூமராங் ஆகிவிடுகிறது. அதற்கு அண்மை உதாரணம்தான் அண்ணாமலையின்  திமுக ஊழல் பட்டியல் வெளியீடு!

”தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்” என்று சொல்லி பரபரப்பை உண்டாக்கிய அண்ணாமலை,  வெளியிட்டது என்னவோ வெறும் சொத்துப்பட்டியல் தான். அதிலும் அதிரும் அளவுக்கு புதிய செய்திகளோ, பெரிய பகீர் விஷயங்களோ கிடையாது. ரஃபேல் வாட்ச் குறித்த சர்ச்சையையும் அவரால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.   

அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியலில்  குறைந்தபட்ச களஆய்வுகூட  செய்யப்படவில்லை என்கிறார்கள். உண்மையான சொத்து மதிப்பு - கணக்குக் காட்டி இருக்கும் சொத்து மதிப்பு - இது இரண்டுக்குமான வித்தியாசத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி இருந்தாலே தமிழக அரசியல் களம் தகித்துப் போயிருக்கும். ஆனால், அதைச் செய்ய அண்ணாமலையால் முடியவில்லை.

உண்மையில் அண்ணாமலை என்ன வில்லங்கத்தைக் கிளப்பப் போகிறாரோ என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்த திமுக தலைவர்கள் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். “அண்ணாமலை ஒரு ஜோக்கர்” என்று அறிக்கைவிட்டு கலாய்க்கிறார்கள். ஒருசிலர், ”எனது சொத்தாக பட்டியல் போட்டிருக்கும் சொத்தை எனக்கு வாங்கிக் குடுங்க; இல்லாட்டி வித்து பணத்தைக் குடுங்க” என பகடி செய்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் காமெடி பீஸ் ஆகிவிட்டார் அண்ணாமலை.

தான் வெளியிட்ட சொத்துப் பட்டியலைக் காட்டி அண்ணாமலை தனக்குத்தானே பிரமிக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், கனிமொழி, சன் குழுமங்களின் தலைவர் கலாநிதி மாறன்  ஆகியோரின் உண்மையான சொத்து மதிப்பைக்கூட அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் வெகுவாக குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த லிஸ்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மிஸ் ஆனது எப்படி என பாஜகவினரே சந்தேகம் கிளப்புகிறார்கள்.  

இந்தச் சூழலில், “அதிமுகவின் ஊழல் பட்டியல் பின்னால் வருகிறது” என்றிருக்கிறார் அண்ணாமலை. அதற்கு, “நெருப்போடு விளையாட வேண்டாம் அண்ணாமலை” என இப்போதே எதிர்வினையாற்றி இருக்கிறது அதிமுக. மற்றவர்களின் ஊழலை பேசத் துணிந்த அண்ணாமலை, தான் உண்மையில் நேர்மையானவனாகத்தான் இருக்கிறேன் என்பதை முதலில் நிரூபித்திருக்க வேண்டும்.   

மக்களிடம் சுமார் ரூபாய் 2,500 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள  ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் அண்ணாமலைக்கும் பங்கிருப்பதாக திமுகவின் ஆலந்தூர் பாரதி சொல்கிறார். ஆருத்ரா அதிபர் ஹரீஸை  பாஜகவில் சேர்த்த காரணத்தையும், அவருக்கு  முக்கிய பொறுப்பு கொடுக்கப் பட்டதையும், அவரை  பிரதமரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததற்கான காரணத்தையும் அண்ணாமலையால் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? என்று பாஜகவுக்குள்ளேயே சிலர் கலகக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல், இன்று வரை ஹரீஸை ஏன் பாதுகாத்து வருகிறார் என்பதற்கு அண்ணாமலையிடம் பதில் இல்லை. 

ரஃபேல் வாட்ச் ரசீதை காட்டவே ஐந்து மாதம் தேவைப்பட்டிருக்கிறது அண்ணாமலைக்கு. அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். சுமார் 3 லட்சத்தை ரொக்கமாக நண்பரிடம் தந்து பெற்றதாகச் சொல்கிறார். அது சட்டப்படி தவறான பணப் பரிமாற்றம்  என்று குற்றம் சாட்டப்படுகிறது. வாட்ச் சீரியல் நம்பரிலும் குளறுபடி என சர்ச்சையைக் கிளப்புகிறார்கள் . இரண்டு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே வைத்திருப்பதாக சொல்பவர் 3 லட்ச ரூபாய்க்கு வாட்ச் வாங்கியது எப்படி என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். காவல் அதிகாரியாக இருந்தபோது ஒரு நிதி நிறுவனத்தின் முறைகேடுளை விசாரிக்காமல் இருக்கவே அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்ச் வழங்கப்பட்டதாக அவரது எதிரிகள் தகவல் பரப்புகிறார்கள்.  அண்ணாமலை அதையும் மறுக்க முயலவில்லை. 

தன்னைவிட தனது மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்று சொன்ன  அண்ணாமலை, நண்பர்களிடம் ஏன் பணம் வாங்குகிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மாதம் 3.75 லட்சம் ரூபாய்  வீட்டு வாடகையை ஒரு நண்பர் எப்படி தருவார்?  24 நேரமும்  பயணிக்கும் அண்ணாமலையிடம் தனது காரை இன்னொரு நண்பர் எப்படி விட்டுவைத்திருப்பார் என்றெல்லாம் ஏகமாகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.   

ஆக, அண்ணாமலை வீசிய கல்,  திரும்பி வந்து அவரையே தாக்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மாதம் 8 லட்ச ரூபாய் அளவுக்கு இவருக்காக நண்பர்கள் செலவு செய்கிறார்கள் என்றால் வருடத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறார்கள். நண்பருக்காக ஒரு கோடி செலவு செய்கிறவர்கள் அவரிடமிருந்து பெற்ற ஆதாயம் என்ன? எதை  எதிர்பார்த்து இதைச் செய்கிறார்கள்  என்பதையும் அண்ணாமலை விளக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். 

 அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைய வேண்டிய  திமுகவினர் கேலியாக சிரித்துவிட்டு கடந்து போய்விட்டனர். தமிழக மக்களும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாது, “ அட போப்பா அண்ணாமலை...” என்று சொல்லிவிட்டு ஐபிஎல் பார்க்கப் போய்விட்டார்கள்.

இந்த விஷயத்தில் பாஜகவிலும் அண்ணாமலைக்கு பெரிதாக சப்போர்ட் ஏதும் இல்லை. அதனால் தான் யாரும் இதுகுறித்து அவருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அண்ணாமலையை குறிவைத்து வீசப்படும் கேள்விகளுக்கும் பதிலும் சொல்லவில்லை. மாறாக, நடிகர் எஸ்.வி.சேகர் போன்றவர்கள் அண்ணாமலையைத்தான் கிண்டல் செய்கிறார்கள். 

அண்ணாமலையால் பாஜகவைவிட்டு விலகிய காயத்ரி ரகுராம், “அண்ணாமலைக்காக செலவு செய்யும் 8 லட்சத்துக்கு வரி யார் கட்டுறாங்க?” என்கிறார். அத்துடன் நிற்காமல், ”விருகம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகனின் இல்லம் மிகவும் எளிமையானது. அவர் அமைச்சரான பிறகும் பாதுகாப்புக்காக வீட்டை மாற்றவில்லை. ஆனால், இசட் பிரிவு பாதுகாப்புக்காக உங்கள் 3.5 லட்சம் வாடகை வீட்டை மாற்றியுள்ளீர்கள் என்பது வெட்கக்கேடானது.  

நண்பர்கள் பணம் செலுத்துவதால், சொகுசு கடிகாரம் மற்றும் சொகுசு வீடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள். நண்பர்கள் மூலம் மாதச் செலவு 8 லட்சம். இதற்கு உங்களிடம் பணம் இல்லையென்றால் பிறகு எப்படி ரஃபேல் வாட்ச் வாங்க உங்களிடம் பணம் வந்தது? முதல் தலைமுறை அரசியல்வாதியான உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம்? நீங்கள் எப்படி காமராஜருடன் உங்களை ஒப்பிடலாம்? என்றெல்லாம் அண்ணாமலையை கேள்விகளால் துளைக்கிறார் காயத்ரி ரகுராம்.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

இதைவிட இன்னும் கூடுதலாக விமர்சித்திருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர், “லட்ச ரூபாயில் அடுத்தவன் காசில் அமோகமாக வாழ்பவனை விட ஆயிரம் ரூபாய் சொந்தக் காசில் வாழ்பவனே மானஸ்தன்; நேர்மையானவன்; தலைமைக்குத் தகுதியானவன்” என்றிருக்கிறார் அவர்.  

கூட்டணித்தோழனான அதிமுகவோ, “முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி மட்டும் பேசுங்கள். அண்ணாமலை பற்றியெல்லாம் கேட்காதீர்கள்” என்று அண்ணாமலையை டோட்டலாக அசிங்கப்படுத்துகிறது. ஆக மொத்தத்தில் திமுகவை அசிங்கப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பிய அண்ணாமலை இப்போது, தானே அசிங்கப்பட்டு நிற்கிறார். 

இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம். ”எங்கள் மாநில  தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின்  சொத்துப் பட்டியலால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் நாங்கள் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. எங்கும் மக்கள் மத்தியில் இதைப் பற்றிய பேச்சாகவே தான் இருக்கிறது.  இது எங்களுக்கான வாக்குகளாகவும் மாற அதிகம் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக  நாங்கள் கருதவில்லை. தன்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் அண்ணாமலை விளக்கம் சொல்லியிருக்கிறார். திமுக சொத்துக் கணக்குகளை  வருமான வரித்துறையினரிடமோ தேர்தல் ஆணையத்திலோ அவர்கள்  கொடுத்திருந்தார்கள் என்றால் அது பற்றிய கவலை இல்லை.  ஆனால், அப்படி இல்லாத பட்சத்தில் எங்கள் தலைவர் சொல்வது தவறு என்றால் அதை அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்” என்றார் அவர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான தான், நினைத்ததைச் செய்து விட முடியும்,  யார் மீது வேண்டுமானாலும் எளிதில் குற்றம் சாட்டிவிட முடியும்,  எதையும் பேசி மக்களை நம்ப வைத்துவிட முடியும் என்று நம்பி பொதுவெளியில் அதிகாரத் தோரணையில் பேசிவருகிறார் அண்ணாமலை. அப்படித்தான் திமுகவினரின் சொத்துப் பட்டியல் குறித்தும் பேசியிருக்கிறார்.

இரண்டு தரப்புமே 500 கோடி அளவுக்கு மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாகச் சொல்லும் நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் திமுகவைவிட அண்ணாமலையே இப்போது அதிகம் விமர்சிக்கப்படுகிறார். சுருக்கமாகச் சொல்வதானால் திமுகவை தோலுரிக்கக் கிளம்பிய அண்ணாமலை தனது சாயம் வெளுத்து நிற்கிறார் என்பதுதான் நிஜம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in