உத்தராகண்டிலும் ஒரு கலகம்: ஹரீஷ் ராவத் அதிருப்தியின் பின்னணி என்ன?

உத்தராகண்டிலும் ஒரு கலகம்: ஹரீஷ் ராவத் அதிருப்தியின் பின்னணி என்ன?

பஞ்சாப் கலகத்தைத் தொடர்ந்து உத்தராகண்டிலும் கலகத்தைச் சந்திக்கிறது காங்கிரஸ். சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத்தின் அதிருப்திக் குரல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்ட மூன்று ட்வீட்டுகள், காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் மற்றுமொரு குழப்பத்தைப் பட்டவர்த்தனமாக்கிவிட்டன.

“விநோதம்தான் இல்லையா? தேர்தல் கடலில் நாம் நீந்தியாக வேண்டும். ஆனால், அமைப்பு என்னை ஆதரிக்காமல், பாராமுகம் காட்டுகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்படுகிறது. நான் யாரைப் பின்தொடர வேண்டுமோ அவர்களின் ஆட்கள் என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். ‘ரொம்பவே பார்த்தாயிற்று ஹரீஷ் ராவத். நிறைய செய்துவிட்டாய். இனி ஓய்வெடுக்க வேண்டிய தருணம்’ எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார் ஹரீஷ் ராவத்.

அதேவேளையில், “நான் பலவீனமானவனும் அல்ல; சவால்களைக் கண்டு பயந்து ஓடுபவனும் அல்ல எனும் குரல் எனக்குள் ஒலிக்கிறது. நான் கொந்தளிப்பில் இருக்கிறேன். புத்தாண்டு எனக்கு ஒரு பாதையைக் காட்டும் என்று நம்புகிறேன். கடவுள் கேதர்நாத் சிவன் எனக்கு வழிகாட்டுவார்” என்றும் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

சமீபத்தில், பஞ்சாப் காங்கிரஸில் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தணிப்பதில் ஈடுபட்டிருந்தவர் ஹரீஷ் ராவத் தான். காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராகக் கட்சித் தலைமை ஹரீஷ் ராவத் நியமித்திருந்த நிலையில், அவர்தான் பஞ்சாபுக்கும் டெல்லிக்கும் இடையில் பறந்து பறந்து ‘பஞ்சாயத்து’ செய்துவந்தார். ஒரு கட்டத்தில் பிரச்சினைகளைத் தணியவைத்துவிட்டதால், சொந்த மாநிலமான உத்தராகண்டில் கவனம்செலுத்த விரும்புவதாகக் கட்சித் தலைமையிடம் கேட்டு அங்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு சொந்தக் கட்சியிலேயே எதிரிகள் அதிகமாகியிருந்தனர்.

குறிப்பாக, உத்தராகண்ட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கணேஷ் கோதியாலுக்கும் ஹரீஷ் ராவத்துக்கும் நிறைய உரசல்கள். ஹரிஷ் ராவத்தின் அரசியல் எதிரி எனக் கருதப்படும் யஷ்பால் ஆர்யா பாஜகவிலிருந்து காங்கிரஸுக்குத் தாவியிருப்பதும் அவருக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவுடனும் ஹரீஷ் ராவத்துக்கு நல்லுறவு இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங்குக்கும் ஹரிஷ் ராவத்துக்கும் ஆகாது. தன்னுடைய செயல்பாடுகளில் ப்ரீத்தம் சிங் தலையிடுவதாக ஹரீஷ் ராவத்துக்கு வருத்தம் உண்டு. ஒரே கட்சிக்காரர்கள் என்றாலும் இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியாது எனும் அளவுக்கு இருவருக்கும் இடையில் பிணக்கு நிலவுகிறது. இப்படி, மாநிலக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார் ஹரீஷ் ராவத். இதற்கிடையே, தேர்தல் பணிகளில் தனக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தனக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை எனும் அதிருப்தி ஹரீஷ் ராவத்துக்கு உண்டு.

தனது ட்வீட்களில் யார் பெயரையும் குறிப்பிடாததால் வட இந்திய ஊடகங்களில் ஏகப்பட்ட ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் காங்கிரஸின் டெல்லி தலைமையைப் பற்றி இப்படிச் சொல்கிறாரா அல்லது உத்தராகண்ட் காங்கிரஸுக்குள் நிலவும் பூசல்களால் இப்படிப் பேசுகிறாரா எனும் விவாதங்கள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் யார் முதல்வர் எனும் கேள்வியும் இருக்கிறது. ஹரீஷ் ராவத்துக்கும் ப்ரீத்தம் சிங்குக்கும் இடையில் இருக்கும் முக்கியப் பிரச்சினை இதுதான். காங்கிரஸ் தலைமை, உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் முகமாகத் தன்னை முன்னிறுத்த வேண்டும் என ஹரீஷ் ராவத் விரும்புகிறார். இதுதான் வெளிப்படையான காரணம்.

இவ்விஷயத்தில், காங்கிரஸ் தலைமை தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பது ஹரீஷ் ராவத்தின் வருத்தம் என்கிறார்கள். நேரம் வரும்போது இன்னும் நிறைய சொல்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

2017 தேர்தலில் ஹரீஷ் ராவத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிட்ட காங்கிரஸுக்குத் தோல்விதான் கிடைத்தது. எனவே, இந்த முறை அவரை முன்னிறுத்திக் களம் காண காங்கிரஸ் தலைமை தயங்குகிறது.

அந்தத் தேர்தலின்போதும் பாஜக சார்பில் முதல்வர் முகமாக, ஆனால் மோடியின் முகத்தை முன்னிறுத்திதான் பாஜக வென்றது. இந்த முறையும் பாஜகவில் சொல்லிக்கொள்ளும் விதத்தில் பெரிய தலைவர்கள் இல்லை. கூடவே, குறுகிய காலத்தில் இருமுறை முதல்வர்கள் மாற்றப்பட்டதும் பாஜக மீது எதிர்மறையான எண்ணங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

எனினும், அம்மாநிலக் காங்கிரஸில் வெளிப்படையாக வெடித்திருக்கும் பிரச்சினை பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும் எனும் பேச்சு எழுந்திருக்கிறது.

“பாஜக மீண்டும் வெல்லும் என்பது நிச்சயம். எனவே, ஹரீஷ் ராவத் தேர்தலைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய இருப்பு குறித்துத்தான் அதிகம் கவலைப்படுகிறார்” என்கிறார்கள் உத்தராகண்ட் பாஜகவினர்.

மூத்த தலைவர்களைக் காங்கிரஸ் நடத்தும் விதம் குறித்தும் பாஜகவினர் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குலாம் நபி ஆசாத் தொடங்கி கேப்டன் அமரீந்தர் சிங் வரை பலர் அவமதிக்கப்பட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஷஹ்ஜாத் பூனாவாலா கூறியிருக்கிறார். "சொந்தக் கட்சியையே ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியாதவர்கள் எப்படி ஆட்சி நிர்வாகத்தைக் கவனிப்பார்கள் என மக்கள் நினைக்கிறார்கள்" என்று பாஜகவினர் எகிறியடிக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைமையின் காதில் இதெல்லாம் விழுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in