ட்விட்டர் ப்ரொஃபைலில் காங்கிரஸ் பெயரை அகற்றிய ஹர்திக்: விலகல் உறுதியாகிறதா?

ட்விட்டர் ப்ரொஃபைலில் காங்கிரஸ் பெயரை அகற்றிய ஹர்திக்: விலகல் உறுதியாகிறதா?

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஹர்திக் படேல், கடந்த சில நாட்களாகவே கடும் அதிருப்தியில் இருக்கிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் சுயவிவரப் பக்கத்தில் காங்கிரஸ் எனும் பெயரை அவர் அகற்றியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய ஹர்திக் படேல், நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டார். மத்திய – மாநில பாஜக அரசுகளுக்குக் கடும் தலைவலியாக உருவெடுத்த அவர் ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இணைந்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அவரைக் கட்சியில் சேர்த்தார்.

இந்தச் சூழலில், தன்னைக் கட்சியிலிருந்து நீக்க சிலர் சதிசெய்வதாகச் சில நாட்களுக்கு முன்னர் ஹர்திக் படேல் குற்றம்சாட்டியிருந்தார். மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறிய அவர், இவ்விஷயத்தில் குஜராத் மாநில காங்கிரஸார் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சில நாட்கள் கழித்து, அரசியல் ரீதியாக பாஜக எடுத்த முடிவுகளைப் பாராட்டிய அவர், அக்கட்சி வலிமையுடன் இருப்பதால்தான் அப்படியான முடிவுகளைத் துணிந்து எடுக்கிறது என்றும் புகழ்ந்திருந்தார். குஜராத்தில் காங்கிரஸ் வலிமை பெற வேண்டும் என்றால், முடிவெடுக்கும் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, இதையடுத்து அவர் பாஜகவில் இணைகிறாரா என்று பரபரப்பு கிளம்பியது. எனினும், அந்தத் தகவல்களை அவர் மறுத்தார். இந்தச் சூழலில், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியை ட்விட்டரில் வெளியிட்ட அவர், ‘நான் இன்னமும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். நான் கட்சியிலேயே தொடர்வது குறித்து மத்திய தலைவர்கள் ஒரு முடிவை எட்டுவார்கள் என நம்புகிறேன். ஏனெனில், நான் கட்சியைவிட்டு விலக வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். என் மன உறுதியைச் சிதைக்க அவர்கள் விரும்புகிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியில் சேர அவர் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாகப் பேசிய அவர், “நான் எந்தப் பக்கமும் சாயவில்லை, உங்களிடம் மன உறுதி இல்லை எனும் சூழலில்தான் பல்வேறு தெரிவுகள் பற்றி யோசனை வரும். என்னிடம் மன உறுதிக்குப் பஞ்சமே இல்லை. நான் குஜராத்தின் நலனுக்காக உழைப்பேன். அதன் அடிப்படையில்தான் எந்த முடிவையும் எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ‘பெருமிதத்துக்குரிய இந்திய தேசபக்தர். சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர். சிறந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டவர்’ என்று மட்டும் இருக்கும் வகையில் தனது ட்விட்டர் சுயவிவரப் பக்கத்தை அவர் மாற்றியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சின்னமான ‘கை’ சின்னத்தையும் அகற்றியிருக்கிறார்.

இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தலைவர்கள் கையோடு ட்விட்டர் ப்ரொஃபைலில் காங்கிரஸின் பெயரை அகற்றிவிடுவது வழக்கம். எனவே, ஹர்திக்கும் விரைவில் காங்கிரஸிலிருந்து வெளியேறுவாரா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in