ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால் மகிழ்ச்சியடைவேன்: எச்.ராஜா

ஹெச். ராஜா
ஹெச். ராஜா

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால் மகிழ்ச்சி அடைவேன். இந்தியாவில் உள்ள 544 தொகுதியிலும் போட்டியிட பிரதமர் மோடி மட்டுமே தகுதி வாய்ந்தவர் என பாஜக நிர்வாகி எச்.ராஜா கூறினார்.  

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில், மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக நிர்வாகி எச்.ராஜா பங்கேற்றார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.., “திராவிட கட்சிகளின் ஆட்சியில், ஆட்சியாளர்கள் மணல் ஏஜென்ட்களாக உள்ளனர். கரூரில் சில அமைச்சர்கள் மணல் கொள்ளையில் வரும் மாமூல் பணத்தை எண்ண கவுன்டிங் மிஷின் வாங்கியுள்ளனர். இருக்கன்குடியில் மணல் குவாரி அமைந்தால், ஆற்றில் மண்ணரிப்பு ஏற்பட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பாதிக்கும் அபாயம் உள்ளது. எதிர்ப்பை மீறி மணல் குவாரி அமைந்தால், பாஜக தொடர் போராட்டத்தில் ஈடுபடும். மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். சிலை காப்பகங்களில் உள்ள பெரும்பாலான சிலைகள் போலியானவை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு அதிகாரி பொன் மாணிக்கவேல், கூறியிருப்பது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதனை காட்டுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலை, தமிழக அரசு கையக்கப்படுத்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது ஆடு நனையுதே என ஓநாய் கவலைப்பட்ட கதையாக உள்ளது. இந்து கோயில்களில் தங்கமே இருக்க கூடாது என்ற நோக்கத்தில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். திமுக அரசு இந்து விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கட்சியின் செயல்பாடுகள், கட்சியினர் மீது தனிப்பட்ட குறைகள் எதுவும் இருந்தால் அது குறித்து, காயத்ரி ரகு ராம் மாநில தலைவரிடம் அல்லது டெல்லி மேலிடத்தில் கூறலாம். இந்தியாவில் உள்ள 544 தொகுதியிலும் போட்டியிட பிரதமர் மோடி மட்டுமே தகுதி வாய்ந்தவர். வரும் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் மகிழ்ச்சி அடைவேன். பிரதமர் மோடி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து, பாஜக மத்திய தலைமை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in