கியான்வாபி - மதுரா மசூதிகள் வழக்கால் பலன் பெறும் பாஜக!

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம்
கியான்வாபி - மதுரா மசூதிகள் வழக்கால் பலன் பெறும் பாஜக!

கியான்வாபி மற்றும் மதுராவின் மசூதிகளை எதிர்க்கும் வழக்குகளால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குப் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது.

அயோத்தி ராமர் கோயிலை முன்வைத்து உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்த கட்சி பாஜக. இதன் பலனாக பிரதமர் வாஜ்பாயின் கீழ் பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியிலும் அமைந்தது. பிறகு, ராமர் கோயில் கட்டுவது என்பது உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு வழக்கால் மட்டுமே சாத்தியம் என்றானது.

ராமர் கோயில் கட்டுமானப்பணி

2014 மக்களவை தேர்தலுக்கு பின் மீண்டும் பாஜக தலைமையில் அமைந்த ஆட்சியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. கடந்த நவம்பர் 2019-ல் வெளியான தீர்ப்பை தனது வெற்றியாக கொண்டாடிய பாஜக, அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டி வருகிறது.

இதன் பலன், பாஜகவிற்கு சமீபத்தில் முடிந்த உ.பி சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி கிடைத்தது. வரும் மக்களவை தேர்தலிலும் தொடர்ந்து வெற்றியைப் பெற வேண்டி, ராமர் கோயிலை 2024-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், வாரணாசியின் கியான்வாபி மற்றும் மதுராவின் ஷாபி ஈத்கா மசூதிகள் மீதும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றில் சில, நீதிமன்றங்களால் ஏற்கப்பட்ட நிலையில், அதன் பலன் தங்களுக்குக் கிடைக்கும் என பாஜகவினர் கருதுகிறனர்.

அப்போதே எழுப்பப்பட்ட கோஷம்

இதன் மீது கட்சியினர் வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், வழக்குகளின் பின்னணியில் பாஜக இருப்பதாகப் புகார்கள் உள்ளன. இப்புகார்களை உபியின் முக்கிய எதிர்கட்சிகளான அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் எழுப்பியுள்ளன. ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இடத்திலிருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992-ல் உடைக்கப்பட்ட போது, ஒரு கோஷம் இடப்பட்டது. அதில், 'பாப்ரி மஸ்ஜீத் தூட்டி ஹை! காசி, மதுரா பாக்கி ஹை!' ( 'பாபர் மசூதி உடைந்தது! இன்னும் காசி, மதுராவின் மசூதிகள் பாக்கி உள்ளன!') எனக் குறிப்பிடப்பட்டது.

இதை பாபர் மசூதியை உடைக்க கரசேவை நடத்திய விஷ்வ இந்து பரிஷத்தினர் எழுப்பினர். தற்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோயிலுக்காக பொதுவான இந்துக்கள் முன்னிற்கவில்லை. மாறாக இந்துத்துவா அமைப்பினரும், பாஜக ஆதரவாளர்களுமே முன்னிருந்து கட்டி வருகின்றனர்.

இச்சூழலில், வாரணாசியின் கியான்வாபி மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் உள் நடத்தப்பட்ட களஆய்வுகளிலும் அம்மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதன் மனுதாரர்கள் தரப்பு கூறுகிறது. அதேசமயம், மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியும் அதனருகிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என வழக்குகள் தொடுக்கப்பட்டு விட்டன. இதன் விசாரணைகளிலும் அம்மசூதிக்கு பெரும் சிக்கல் எழும் வாய்ப்புகள் உள்ளன.

சட்டத்திற்கும் எதிராக வழக்கு

இந்த அரசியல் விவகாரத்தில், முஸ்லிம்களின் ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட ஆக்ராவின் தாஜ்மகால், டெல்லியின் குதுப்மினார் மற்றும் ஜாமா மசூதியும் கூட விட்டு வைக்கவில்லை. இவைகளின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளை தொடுப்பவர்களில் ஒருவர் கூட நடுநிலையாளர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. அனைவருமே இந்துத்துவா கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்கள். இதில், தாஜ்மகால் மீதான வழக்கு மட்டுமே ஏற்கப்படவில்லை.

இரண்டு மசூதிகள் உள்ளிட்ட நாட்டின் முஸ்லிம்களின் சொத்திற்கு ஒரே ஒரு சட்டமே பாதுகாப்பாக உள்ளது. இது, காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் இட்ட 'வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991' ஆகும்.
இந்த சட்டத்தை காட்டி அது இடப்பட்ட துவக்கக் காலங்களில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல வழக்குகள் ஏற்கப்படவில்லை. மேலும், இதுவரை முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாக்கும் சட்டத்தையும் ரத்து செய்ய கடந்த வருடம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழல் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக பாஜகவினர் கருதுகின்றனர். இதற்கேற்ற வகையில், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை முன்கூட்டியே துவக்கி விட்டனர். இந்தியாவில், முஸ்லிம்கள் மட்டும் இல்லை என்றால் பாஜகவே வளர்ந்திருக்காது என்பது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முஸ்லிம்களால் வளர்ந்துவிட்ட பாஜகவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸும் வலுவான தலைமையும் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

மதங்களையும், வழிபாட்டுத்தலங்களையும் முன்னிறுத்தி தேர்தல்களில் வாக்குகள் கேட்பது சட்டவிரோதம் என உள்ளது. ஆனால், இந்த சட்டங்களில் தப்பும் வகையில் அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் நடவடிக்கை உள்ளன. எதிர்கட்சிகளிலும் பாஜகவை எதிர்க்கும் ஒரே கருத்துடன் ஒற்றுமை உருவாவது கேள்விக்குறியாகத் தொடர்கிறது. அதேசமயம், ஜனநாயக நாடான இந்தியாவின் மதநல்லிணக்கச் சூழலுக்கும் ஆபத்து வலுப்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in