
எதிர்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே அமலாக்கத்துறை நாடகத்தை நடத்தி வரும் மத்திய அரசு 89 கோடி ரூபாய் குட்கா ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எடுத்த நடவடிக்கை என்னவென்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,, ‘’நியாயவிலை கடை பணியாளர்கள் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு படிப்படியாக பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், நியாயவிலை கடை ஊழியர்களின் பணி நியமனத்திற்கான காலக்கட்டத்தை நீதிமன்றமே 6 மாதம் நீடித்துள்ளது. இதில் பல்வேறு நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே மத்திய அரசு, அமலாக்கத்துறை நாடகத்தை நடத்தி வருகிறது. 89 கோடி ரூபாய் குட்கா ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நம் நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும் போது பாரத பிரதமர் மேலை நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்’’ என்றார்.