சோனியாவைச் சந்தித்த குலாம்!

சோனியாவைச் சந்தித்த குலாம்!
கே.சி.வேணுகோபால், சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத்கோப்புப் படம்

5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தித் தலைவர்களான ஜி-23 தலைவர்கள் கட்சித் தலைமை குறித்து மீண்டும் விமர்சிக்கத் தொடங்கினர். கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 13) நடைபெற்ற நிலையில், ஜி-23 குழுவைச் சேர்ந்தவர்களும் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் மூன்று முறை சந்தித்து ஆலோசித்துவந்தனர்.

செயற்குழுக் கூட்டத்தில் ஜி-23 குழுவைச் சேர்ந்த சிலர் பங்கேற்றது, அக்குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியது என தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஜி-23 தலைவர்கள் யார்?

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும் என்றும், உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்சித் தலைமைக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட 23 பேர் ‘ஜி-23’ தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

18 பேர்

இதற்கிடையே, நபி ஆசாத் இல்லத்தில் நடந்த கூட்டங்களில் ஜி-23 தலைவர்கள் கூட்டத்தில் அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பிரணீத் கவுர் (கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி), குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா (2017-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்) போன்ற தலைவர்கள் என 18 பேர் கலந்துகொண்டனர்.

வழக்கமான சந்திப்புதான்

இந்நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் இன்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், “இது உங்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம். ஆனால், இது கட்சித் தலைவருடனான வழக்கமான சந்திப்புதான். இந்தச் சந்திப்பின்போது, எதிர்வரும் தேர்தல்களுக்குக் கட்சி எவ்வாறு ஒற்றுமையுடன் தயாராவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமை குறித்து கேள்வியே எழவில்லை. சோனியா காந்தி பதவி விலக வேண்டும் என்று செயற்குழுக் கூட்டத்தில் யாருமே கேட்கவில்லை” என்றும் அவர் விளக்கமளித்தார்.

புதன்கிழமை நடந்த கூட்டத்துக்குப் பின்னர் ஜி-23 தலைவர்கள் விடுத்த அறிக்கையில், “அனைவரையும் உள்ளடக்கியதான கூட்டுத் தலைமை மற்றும் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கக்கூடிய சூழல் அடங்கிய மாதிரியைக் காங்கிரஸ் கட்சி கைக்கொண்டால்தான், முன்னேற்றம் காண முடியும்” என்று கூறப்பட்டிருந்தது. கட்சியைப் பலப்படுத்தவே விரும்புவதாகவும், பின்னடைவை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

கட்சிவிரோத நடவடிக்கை அல்ல

இதற்கிடையே, ராகுலைச் சந்தித்த பூபேந்திர சிங் ஹூடா, அவரிடம் பல முக்கியக் கேள்விகளை முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கட்சியில் யார் முடிவுகளை எடுக்கிறார் என்று ராகுலிடம் கேட்ட ஹூடா, கட்சி முடிவுகள் குறித்து நாளிதழ் செய்திகளைப் பார்த்துதான் காங்கிரஸ் தலைவர்கள் தெரிந்துகொள்கின்றனர் என்றும் வருத்தப்பட்டாராம்.

கட்சிவிரோத நடவடிக்கை எதிலும் ஜி-23 தலைவர்கள் ஈடுபடவில்லை என்றும், சோனியா காந்தியிடம் சொல்லிவிட்டுத்தான் கூட்டம் நடத்துவதாகவும் ஹூடா விளக்கமளித்திருந்தார்.

Related Stories

No stories found.