பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல்: இணைப்பு விழாவைப் புறக்கணித்த பாஜக பெருந்தலைகள்!

பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல்: இணைப்பு விழாவைப் புறக்கணித்த பாஜக பெருந்தலைகள்!

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கும் ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் பலரை பாஜகவில் சேர்க்கவிருப்பதாகச் சூளுரைத்திருக்கிறார். எனினும், அவரது வருகையை பாஜக தலைவர்கள் முழு அளவில் வரவேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி எனும் பெயரில் படேல் சமூகக் குழுக்கள் இணைந்து நடத்திய போராட்டம், 2015 முதல் 2019 வரை நீடித்தது. இந்தப் போராட்டங்களை வழிநடத்தியதன் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டவர் ஹர்திக் படேல். அவரது செல்வாக்கைப் பார்த்து, காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தி அவருக்கு அழைப்பு விடுத்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் ஹர்திக் படேல் இணைந்தார்.

கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டிவந்த அவர், இதுதொடர்பாக ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பின்னரும் இந்தப் பிரச்சினை நீடிப்பதாக அவர் விமர்சித்துவந்தார். கூடவே, பாஜகவைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சியினரை அதிரவைத்தார். இதையடுத்து அவர் காங்கிரஸைவிட்டு விலகுவார் என்று ஊகங்கள் எழுந்தன. எனினும், ஆம் ஆத்மி கட்சியில் இணைவாரா அல்லது பாஜகவுக்குச் செல்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில், கட்சியிலிருந்து விலகுவதாக மே 18-ம் தேதி அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘நெருக்கடியான சூழல்களில் நம் தலைவர் வெளிநாட்டில் இருந்தார்’ என ராகுல் காந்தி மீது கடும் விமர்சனத்தையும் அவர் முன்வைத்திருந்தார். வேறொரு கட்சியில் இணைவது எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறிவந்த அவர், எந்த முடிவை எடுத்தாலும் மக்களின் நலனை மனதில் கொண்டே அது இருக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். எனினும், அவர் பாஜகவில் இணைவது உறுதி எனச் செய்திகள் வெளியாகின. எதிர்பார்த்தபடியே இன்று (ஜூன் 2) அவர் பாஜகவில் இணைந்தார். காந்திநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், மூத்த தலைவர் நிதின் படேல் உள்ளிட்டோர் ஹர்திக் படேலை வரவேற்றனர். காவி தொப்பி, காவித் துண்டு சகிதம் பாஜகவில் ஐக்கியமானார் ஹர்திக் படேல்.

பாஜகவில் சேர அழைப்பு

காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும், சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பாஜகவில் சேர்க்க ஒவ்வொரு 10-வது நாளிலும் கூட்டம் நடத்தப்போவதாக ஹர்திக் படேல் அறிவித்திருக்கிறார்.

“காங்கிரஸ் கட்சி எந்தப் பணியையும் செய்ய விரும்பவில்லை என்றே கருதுகிறேன். பிற கட்சியினரும் பாஜகவில் இணைந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். பிரதமர் மோடி மொத்த உலகத்தின் பெருமிதம்” என்று ஹர்திக் படேல் கூறியிருக்கிறார்.

மேலும், “இன்று ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன். ஒரு சிறிய சிப்பாயாக நான் செயலாற்றுவேன். எந்தப் பதவிக்காகவும் யாரிடமும் எந்த நிபந்தனையையும் நான் வைக்கவில்லை. நான் பாஜகவில் சேர்ந்தது பணிசெய்வதற்காக. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளில் மக்கள் இணைந்துவருகிறார்கள். அதேபோல நானும் பாஜகவில் சேர வேண்டும் என்று விரும்பினேன்” என்று தெரிவித்தார். பாஜகவில் சேர்வதற்கு முன்னர் சுவாமிநாராயணன் கோயிலில் வழிபாடு செய்தார்.

புறக்கணித்த முக்கியத் தலைவர்கள்

அதேசமயம், மத்திய அமைச்சர்கள், குஜராத் மாநில அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் யாரும் வரவில்லை.

ஹர்திக் படேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களைக் கடுமையாக விமர்சித்தவர் என்பதால், அவரது வருகையை பாஜக தலைவர்கள் பலர் ரசிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் கூட, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அழுக்கு அரசியலை எதிர்த்துப் போராடுவதாக அவர் ட்வீட் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in