மூன்று மாநிலங்கள்... மூன்று விதமான முடிவுகள்!

தேர்தல் தீர்ப்புகள் காட்டும் திசை என்ன?
மூன்று மாநிலங்கள்... மூன்று விதமான முடிவுகள்!

குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைகள் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளுக்குமே தலா ஒரு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியானது இனிவரும் தேர்தல்களிலும், 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

நாடே ஆவலடன் எதிர்பார்த்த பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வென்று இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இம்மாநிலத்தில் பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர். டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 இடங்களை கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி, பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வென்றுள்ளனர்.

குஜராத்தில் பாஜகவின் வெற்றி - ஸ்கேன் ரிப்போர்ட்!

1995-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கிறது பாஜக. அங்கு பாஜகவின் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை, அதன் எதிரொலியாகவே கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று அசத்தியது. அத்தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 49.1%, காங்கிரஸ் 41.4% வாக்குகள் பெற்றது. அப்போது ராகுல் காந்தி குஜராத்தில் சூறாவளி பரப்புரை செய்தார். கூடவே, மக்களிடம் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் இருந்தது.

ஆனால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் மோசமான தோல்வி மக்களிடம் மட்டுமல்ல காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடமே எதிரொலித்தது. இதன் காரணமாக, தொடக்கத்தில் 77 ஆக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 56 ஆனது. இப்படி காங்கிரஸ் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்தாலும், தேர்தல் நெருக்கத்தில் அக்கட்சி நம்பிக்கையுடன்தான் இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக ஆம் ஆத்மி கட்சி அதிரடியாக குஜராத்தில் களம்கண்டது காங்கிரஸுக்கு பேரிடியாக மாறியது.

மோடி- அமித்ஷா
மோடி- அமித்ஷாhindu

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி குஜராத்தில் 156 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. அம்மாநில தேர்தல் வரலாற்றிலேயே ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி இதுதான். முன்னதாக, 1985-ல் காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளில் வென்றது சாதனையாக இருந்தது. பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோதுகூட பாஜகவால் அதிகபட்சமாக 127 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. குஜராத்தில் தற்போது பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது, அக்கட்சியின் அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றிதான்.

குஜராத்தில் படிதார்களின் செல்வாக்கு அதிகம். அவர்கள் கடந்த தேர்தலில் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர். எனவே, கடந்த ஆண்டில் அந்த சமூகத்தைச் சேர்ந்த பூபேந்திர படேலை முதல்வராக்கினார்கள். காங்கிரஸில் இருந்த ஹர்திக் படேலை தங்கள் பக்கம் வளைத்துப்போட்டனர். கடந்த சில மாதங்களாகவே மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் படையே குஜராத்தில்தான் மையம் கொண்டிருந்தது. கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை குஜராத்துக்கு மத்திய அரசு அறிவித்தது.

இப்படி ஓவ்வொரு விஷயத்திலும் பாஜக பார்த்துப் பார்த்து குஜராத்தின் வெற்றிக்கு மெனக்கிட்டது. கடைசியாக, டிசம்பர் 5-ம் தேதி பிரதமர் மோடி 2 கி.மீ தூரம் குஜராத்தில் நடந்தே சென்று வாக்களித்தார். இப்படி குஜராத் வெற்றிக்காக பாஜக தனது அனைத்து அஸ்திரங்களையும் உபயோகித்தது. இதன் காரணமாகவே 2017-ல் 49.1 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் தற்போது 52.5 சதவீதமாகியுள்ளது.

குஜராத்தில் அப்போதும் இப்போதும் மோடியின் முகத்தை முன்னிறுத்தியே பாஜகவின் பிரச்சாரம் நடந்தது. ஆனால், இம்மாநிலத்தில் காங்கிரஸின் சார்பில் யாருமே முன்னிறுத்தப்படவில்லை. ராகுல் காந்தியும் சம்பிரதாயத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்தார். மற்ற தலைவர்களின் பிரச்சாரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தது. மக்களைக் கவரும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. இதன் காரணமாக, 2017-ல் இருமுனை போட்டி என இருந்த குஜராத் தேர்தல் களம், இந்த தேர்தலில் மும்முனை போட்டியாக மாறியது.

ஆம் ஆத்மியின் வருகை துளியும் பாஜகவை பாதிக்கவில்லை என்றாலும், காங்கிரஸின் வெற்றி எண்ணிக்கையை அக்கட்சி அடித்து நொறுக்கியது. ஆம் ஆத்மியால் வெறும் 5 இடங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது என்றாலும், பல தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றியை துடைத்துப் போட்டது துடைப்பம் சின்னம். 2017-ல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 41.4 சதவீதம். இந்த தேர்தலில் அது 27.3 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கிட்டத்திட்ட 14 சதவீதம் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 12.9 சதவீதம். இதிலிருந்தே காங்கிரஸுக்கு கேஜ்ரிவால் வைத்த செய்வினையை புரிந்துகொள்ளலாம். அதுபோல இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பல தொகுதிகளில் காங்கிரஸின் வாக்குகள் ஓவைசியின் கட்சிக்கு கைமாறியது. குஜராத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட இழந்துள்ளது அதிர்ச்சிதான். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறியதன் மூலம் தேசியக் கட்சி என்ற தகுதியையும் பெற்றுள்ளது. குஜராத் போல மும்முனை, நான்கு முனை போட்டிகள் நிலவும் பல மாநிலங்களில் ஏற்கெனவே பாஜக அசால்டாக வெற்றியை சுவைத்துள்ளது. அதே ஃபார்முலா குஜராத்திலும் கைகொடுத்துள்ளது.

இமாச்சலில் காங்கிரஸின் உற்சாக வெற்றி!

இமாச்சல பிரதேசத்தில் வழக்கம்போல இந்த முறையும் ஆட்சி மாறியுள்ளது. அந்த மாநிலத்தில் 1985 முதலே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. இந்த முறை எப்படியும் வரலாற்றை மாற்றி எழுதி இரண்டாவது முறையாக வெற்றிபெற வேண்டும் என பாஜக முயற்சி செய்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலில் பெற்ற வெற்றியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர் காங்கிரஸார்.

இந்த மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி தீவிர பரப்புரையில் இறங்கியது, ஆனால், அது எடுபடவில்லை. இம்மாநிலத்தில் 43.9 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 40 தொகுதிகளில் வென்றது. அதே நேரத்தில் 43 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜகவால் 25 தொகுதிகளையே வெல்ல முடிந்தது. ஆம் ஆத்மிக்கு 1.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சல பிரதேச வெற்றி புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. முக்கியமாக, ராஜஸ்தான், சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் 3-வது மாநிலமாகவும் இமாச்சல பிரதேசம் மாறியுள்ளது.

இமாச்சலில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது, இதனால்தான் ராகுல் காந்தி பிரச்சாரத்துக்கு செல்லாதபோதும், கடும் கோஷ்டிபூசல்களுக்கு இடையேயும் அங்கே அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேபோல பிரியங்கா காந்தியின் பரப்புரையும் காங்கிரஸாரை உற்சாகமாக வேலைபார்க்க வைத்தது. எனவே, இமாச்சலைப் போல ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டமைப்பை பலப்படுத்தினால் மட்டுமே, காங்கிரஸால் வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்பது உண்மை.

டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி அலை!

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்தாலும், டெல்லி மாநகராட்சி பாஜகவின் கையில்தான் இருந்தது. இதன் காரணமாக, மிகத்தீவிரமாக பரப்புரை செய்த அர்விந்த் கேஜ்ரிவால், இந்தமுறை டெல்லி மாநகராட்சியின் 15 ஆண்டுகால பாஜகவின் வெற்றிக்கு முடிவுரை எழுதியுள்ளார். ஆகமொத்தம் தற்போது இந்தியாவின் மூன்று முக்கிய கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் தங்களின் வெற்றி முத்திரையை ஒவ்வொரு இடத்தில் பதித்துள்ளது.

இமாச்சல் தேர்தலும், குஜராத் தேர்தலும் வரும் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான தெளிவான பாதையை காட்டுகிறது. பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவிய இமாச்சலில் போராடியேனும் காங்கிரஸால் வெற்றிபெற முடிகிறது. ஆனால், பாஜக-காங்கிரஸ்-ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவிய குஜராத்தில் பாஜக எதிர்க்கட்சிகளை தூசிபோல ஊதித் தள்ளுகிறது.

2023-ம் ஆண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. இந்த தேர்தல்களில் எத்தனை முனை போட்டி முளைக்கிறது என்பதைப் பொறுத்தே, வெற்றி தோல்விகள் அமையும். அதேபோல மக்களவைத் தேர்தலிலும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைந்தால் மட்டுமே பாஜகவை வலுவாக எதிர்க்கவாவது முடியும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை என்பதே களநிலவரம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in