தேர்தலுக்கு முன்னதாக பொது சிவில் சட்டம்: குஜராத் பாஜக அரசின் அதிரடி வியூகம்!

தேர்தலுக்கு முன்னதாக பொது சிவில் சட்டம்: குஜராத் பாஜக அரசின் அதிரடி வியூகம்!

தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவதற்கான குழுவை அமைப்பதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று அறிவித்துள்ளார்.

பதவி நிறைவடையவுள்ள குஜராத் அரசாங்கத்தின் பாஜக அமைச்சரவை, மாநிலத்தில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் ஒரு குழுவை அமைக்கும் திட்டத்தை இன்று முன்வைத்துள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி பொது சிவில் சட்டம் குறித்த மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்களை அறிவிக்க உள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த சூழலில் ஆளும் கட்சியான பாஜகவின் அதிரடி மூவ்-வாக பொது சிவில் சட்டம் பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம், உத்தரகாண்ட் அரசாங்கம் தனது மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவை அறிவித்தது. அதே மாதத்தில், இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூரும், விரைவில் தங்கள் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.

பொது சிவில் சட்டம் என்பது பல்வேறு மத சமூகங்களின் புனித நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ள தனிப்பட்ட சட்டங்களை மாற்றியமைக்கும். அனைவருக்குமான பொதுவான சட்டங்களை உருவாக்கும். இருப்பினும், பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் பல மாநிலங்களில் எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB), " இது அரசியலமைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை. இது பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையிலிருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சி” என கூறியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை உருவாக்கவோ அல்லது இயற்றவோ பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தனது பிரமாணப் பத்திரத்தில், கொள்கை விவகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக எந்த உத்தரவும் மத்திய அரசால் வெளியிட முடியாது என்றும் தெரிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in