ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் - மத்திய அரசுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சவால்!

ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் - மத்திய அரசுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சவால்!
செய்தியாளர்கள் சந்திப்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது மாநில அரசு பெட்ரோல் விலையை குறைத்தது பற்றியும், மத்திய அரசு தொடர்ந்து ஏற்றிக்கொண்டே செல்வது பற்றியும் குறை கூறிப் பேசினார்கள் அவர்கள்.

இதுகுறித்து இன்று பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர திமுக எதிர்ப்பது ஏன்? ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது ஏன்? முன்பு பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய திமுக இப்போது மாற்றிப் பேசுவது ஏன்?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அப்போது அவர் கூறியதாவது;

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று 2018- ஆண்டு எங்கள் தலைவர் கூறி இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், இன்றைக்கும் 2018-ம் ஆண்டுக்கும், அதற்கும் முன்பாக 2014-ம் ஆண்டுக்கும் பல மாறுபட்ட சூழ்நிலைகள் இருக்கிறது. கச்சா எண்ணெய் சந்தையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் நிறைய மாற்றம் இருக்கிறது. 2001 -2002ம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலர், 12 டாலர் என்று இருந்தது. ஆனால், 2013 , 2014-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 130 டாலராக உயர்ந்தது. பண வீக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளப்படாமலேயே இவ்வளவு வேறுபாடு இருந்தது.

மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஓரளவுக்கு அதிகரித்த உடனே பல முறையை வரியை குறைத்து, மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயக்கும் அளவிற்கு தொடர்ந்து விலையைக் குறைத்து எல்லா வகையிலும் விலையை கட்டுப்படுத்தி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை கிடைக்கச் செய்தார் மன்மோகன் சிங். ஐமுகூ ஆட்சி மாறும்வரையில் பெட்ரோல், டீசல் மீதான ஒன்றிய அரசின் வரியானது நேர்முக வரி 55 சதவீதமும், மறைமுக வரி 45 சதவீதமுமாக இருந்தது. நேர்முக வரி என்பது மாநகராட்சி வரியும், வருமான வரியும் ஆகும். இவை நியாயமானவை.

வருமானம் அதிகரிக்க அதிகரிக்க விலையை அதிகரிக்கலாம். மறைமுக வரி என்பது (பாயின்ட் ஆப் சேல் டேக்ஸ்) யார் வாங்குகிறார்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது. வாங்குகிறவர்கள் மேல் விற்கிறவர்கள் அந்த வரியை தீட்டி அதனால் அரசாங்கத்திற்கு வரியை ஈட்டி கொடுக்கலாம். அந்த மாதிரி வரியே தேய்வு விகித வரி ஆகும். வரி வீதத்துக்குக் தக்க தொகை கூடக்கூட வருமான வரி விகிதம் குறைந்தால் அம்முறை தேய்வீத வரிவிதிப்பு எனப்படுகிறது.

தனிநபர் நோக்கில் இந்த வரிவிதிப்பு முறை ஏழைகளின் வரிச்சுமையைக் கூட்டி பணக்காரர்களின் வரிச்சுமையைக் குறைக்கின்றது. அதாவது அவர்களது வரிகட்டும் ஆற்றலோடு ஒப்பிட்டு இப்படிச் சொல்கிறேன். இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை வளர்விகித வரி எனப்படுகிறது. தொடர்ந்து இன்றைக்கு இருக்கிறே ஒன்றிய பாஜக அரசாங்கம் நேர்முக வரியை குறைத்து குறைத்து பணக்காரர்கள் நியாயமாக கட்ட வேண்டிய வரியை குறைத்துவிட்டார்கள்.

ஒன்றிய அரசிற்கு 100 ரூபாய் வரி வருமானம் வருகிறது என்றால் அதில் வெறும் 45 முதல் 47 ரூபாய் தான் நேர்முக வரி ஆகும். அந்த இடைவெளியை சரி செய்வதற்காக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு இறங்கி ஏறி இருந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இந்த வரியை கடுமையாக அதிகரித்தது. 2014-ம் ஆண்டு இன்றைய ஒன்றிய (மோடி) அரசு ஆட்சிக்கு வரும் போது மொத்த ஒன்றிய அரசாங்கத்துடைய பெட்ரோல் வரியானது ஒரு லிட்டருக்கு சுமார் 10 ரூபாயும், டீசல் மீதான வரி 5 ரூபாயும் தான் இருந்தது. இதில் 90 சதவீதம் கலால் வரியாக எடுக்கப்பட்டு 5 முதல் 10 சதவீதம் தான் செஸ் சர் சார்ஜாக எடுக்கப்பட்டது.

அப்படியென்றால் 90 சதவீதம் ஒன்றிய அரசாங்கம் எடுத்த பிறகு மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுத்தது ஒரு காலத்தில் 32 சதவீதம். 14 வது நிதிக்குழு வந்த பிறகு 42 சதவீதம் இருந்தது. அதனை நேராக மாற்றி படிப்படியாக அந்த வரியை உயர்த்தி இன்றைக்கு பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 பைசாவும், டீசலுக்கு 31 ரூபாயும் வரியை ஒன்றிய அரசாங்கம் தீட்டுகிறார்கள். அந்த வரியில் 4 சதவீதம் அதாவது, வெறும் 1 ரூபாய் 40 பைசா தான் கலால் வரியாகப் பிரிக்கக் கூடிய வரியாக வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் ஒன்றிய அரசாங்கம் செஸ் சர் சார்ஜாக எடுத்துக்கொள்கிறது. அந்த வரியை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே செஸ் வரியாக வசூலிக்கிறது.

அடுத்ததாக தற்போது நடந்த ஜிஎஸ்டி கூட்டம் குறித்த அஜென்டாவில் ஒன்றிய அரசு இதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதாக சொல்லவில்லை. கேரள உயர்நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கொன்றில் அளித்த தீர்ப்பில், பெட்ரோல், டீசல் விலையை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது என்பதை ஜிஎஸ்டி கவுன்சிலில் வைத்து அந்த முடிவை எங்களுக்கு தெரிவியுங்கள் என கூறி இருக்கிறார்கள். ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தான் நிதி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசிற்கும் இதில் விருப்பமில்லை. எந்த மாநில அரசுகளும் இதனை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் ஒன்றிய அரசின் மொத்த வருமானம் இருபது சதவீதம் பெட்ரோல் மற்றும் டீசலில் மட்டும் வருகிறது.

இதனை இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால் பிசினெஸ் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கில நாளிதழில் பொருளாதார பேராசிரியர் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் எந்த அளவிற்கு ஒன்றிய அரசாங்கம் வசதி படைத்தவர்களிடம் இருந்து வரியை குறைத்து சாமான்ய மக்களின் மீது மாற்றியதோ அந்தளவிற்கு விலைவாசி உயரும் என்றும், அதுவும் ஏழை சாமானிய மக்களைத் தான் கூடுதலாக பாதிக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால் இந்த ஒன்றிய அரசாங்கம் அவர்களது நண்பர்களான பெரிய பணக்காரர்களுக்கு வரியை குறைத்ததினால் ஏழை எளிய சாமானிய மக்கள் மீது இரண்டு வகையில் வரியை அதிகரித்து இருக்கிறார்கள்.

ஒருவகை பாயிண்ட் ஆப் சேல் பெட்ரோல் டீசலில் மற்ற பொருட்களில் அதிகரித்து உள்ளார்கள். இதெல்லாம் வந்த பிறகு எல்லா மாநிலங்களும் ஒரே கருத்தை தான் கூறினோம். ஏனென்றால் ஜிஎஸ்டி வந்த பிறகு நம் அரசியல் அமைப்புச் சட்டத்தில், கொஞ்சமேனும் இருந்த மாநில அரசுகளின் வரி உரிமை ஜிஎஸ்டி மூலம் எடுக்கப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டி வந்த பிறகு வரி உரிமையை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டது. இது போன்ற நடைமுறை உலகில் எந்த நாடுகளிலும் இல்லை. சீனா போன்ற கம்யூனிச நாடுகளிலும் கூட ஏன் முதலாளித்துவம் இருக்கிற அமெரிக்காவில் கூட இல்லை. அங்கெல்லாம் ஒன்றியமும் வரி விதிக்கும், வருமான வரி நேர்முக வரி போன்றவற்றை மாநிலமும் விதிக்கும். மாவட்டமும் மாநகரமும் கூட வரி விதிக்கும் முறை தொடர்கிறது.

ஆனால் இங்கு அந்த வரியை சட்ட ரீதியாகவே மாநில அரசுகள் இழந்து விட்டோம். 70 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டியை உருவாக்கி இருந்த மறைமுக வரி உரிமையையும் 75 சதவீதம் இழந்து விட்டோம். மீதமுள்ள இரண்டு வகை பெட்ரோல் டீசல் மற்றும் மதுபான பொருட்கள் மீதான வரிகள் மட்டும் தான் நம் கையில் இருக்கிறது. மாநிலங்கள் எங்களுடைய உரிமைகளை எல்லாம் எடுத்து விட்டீர்கள் என்றால் நாங்கள் எப்படி எங்கள் பொருளாதாரத்தை மேலாண்மை செய்வோம் என கேட்கிறோம்.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் சட்டமன்றத்தில் ஒரு குறிப்பை பேசினார். அதை நான் முழுமையாக பின்பற்றினேன். நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்த போது அரசிடம் நிதி இல்லை. அப்போது எம்ஜிஆர் 7 சதவீதம் இருந்த தமிழ்நாடு விற்பனை வரியை 8 சதவீதமாக ஆக்கி அதில் வந்த நிதியை முழுமையாக பயன்படுத்தி உணவளிக்க ஏற்பாடு செய்தார்.

இதுதான் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் ஆகும். அந்த 90 சதவீத உரிமையை இழந்து விட்டோம். எந்த மாநிலமும் எங்கள் உரிமையை கொடுத்து விடுகிறோம் என்று ஒன்றிய அரசிடம் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் அதனை மீறி ஒரு கருத்தை சொன்னோம். ஏனென்றால் எங்கள் தலைவர் வழியில் நாங்கள் கருத்து மாறாதவர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியாக இருக்கும் போதும் ஒரே கருத்துதான். சிறந்த பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கேன்ஸ் சொன்னது போல சூழ்நிலை மாறும் போது, எங்களுடைய நிலைப்பாடும் மாறும்.

ஒரு காலத்தில் பெட்ரோல் டீசலுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் எடுத்து கொண்டிருந்த வரியை இன்றைக்கு 32 ரூபாய் எடுக்கிற போது நீங்கள் எப்போது செஸ் சஸ்சார்ஜை கைவிடுகிறீர்களோ அதாவது பகிர்ந்து கொடுக்காத வரியை எப்போது கைவிடுகிறீர்களோ அப்போது நாங்களும் பெட்ரோல் டீசலுக்குத் தனியாக வரிப்போடுவதை விட்டுவிட்டு ஜி.எஸ்.டி.யில் சேருவது பற்றி மறுபரிசீலனை செய்வோம். நாம் இதில் இருந்து ஜிஎஸ்டிக்கு பெட்ரோல் டீசலை கொண்டு போய் வைத்தால் இன்றைக்கு ஜிஎஸ்டி ஸ்லாப் படி, 28 சதவீதத்தில் கொண்டு போய் பெட்ரோல் டீசலை வைப்பார்கள். 14 சதவீதம் ஒன்றிய ஜிஎஸ்டி 14 சதவீதம் மாநில ஜிஎஸ்டி என்று. அதில் பகிர்ந்து கொடுக்க வேண்டியது ஒரு சதவீதமும் வரும். அதனால் நம்முடைய 20 சதவீதம் வரி வருவாயானது 15 சதவீதம் ஆகும். ஆனால் அதனுடைய விளைவை நாம் காண முடியும்.

ஏற்கெனவே 3 ரூபாய் குறைத்த போது அதன் விளைவை காண முடிந்தது. அதனால் பெட்ரோல் டீசல் மீதான மொத்த வரி குறைந்தால் நாட்டிற்கும் நல்லது சாமான்யர்களுக்கும் நல்லது. இந்த ஐந்து ஆறு சதவீதத்தை ஏற்க தமிழ்நாடு மாதிரி அரசாங்கம் ஏற்க தயார். ஆனால் ஒன்றிய அரசுக்கு நாங்கள் விதிக்கும் நிபந்தனை என்னவென்றால், அவர்கள் எடுத்து வரும் 31 ரூபாயை எடுத்து விட வேண்டும். அதனை அவர்கள் என்றைக்குச் செய்கிறார்களோ அன்றைக்கு அனைவரும் (அனைத்து மாநிலங்களும்) சேர்ந்து ஜிஎஸ்டிக்குள் சென்று விடுவோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.