மேடையிலேயே பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்துக்கு வந்தது ஜிஎஸ்டி நிலுவைத் தொகை

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகை 86,912 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. மே 31-ம் தேதி வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 9,062 கோடியும் இதில் அடக்கம்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. சரியான நேரத்தில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்படுவதில்லை எனத் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதுபோல பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மத்திய அரசிற்குக் கோரிக்கைகள் வலுத்தன. சரியான நேரத்தில் நாங்கள் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை அளித்து வருவதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க வந்த மோடியிடம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நீட் விலக்கு, கச்சத் தீவு மீட்பு எனப் பல்வேறு கோரிக்கைகளை மேடையிலேயே எடுத்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இது தமிழக அரசியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு நிலுவையில் உள்ள 86,912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையாக மத்திய அரசு திடீரென விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 9,062 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையாக மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு மே 31-ம் தேதிவரை வழங்கப்பட வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி தொகைகளும் எவ்வித நிலுவையும் இல்லாமல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in