கட்டம் கட்டி தூக்கும் ஏக்நாத் ஷிண்டே: கையறு நிலையில் உத்தவ் தாக்கரே!

கட்டம் கட்டி தூக்கும் ஏக்நாத் ஷிண்டே: கையறு நிலையில் உத்தவ் தாக்கரே!

நவி மும்பையைச் சேர்ந்த 32 சிவசேனா மாநகராட்சி உறுப்பினர்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷிண்டேவுக்கான ஆதவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் உத்தவ் தாக்கரேவின் பலம் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது.

தானேயைச் சேர்ந்த 66 சிவசேனாவின் மாநகராட்சி உறுப்பினர்கள் நேற்று ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்ததை அடுத்து தற்போது நவி மும்பையை சேர்ந்த 32 சிவசேனா உறுப்பினர்களும் அவர் பக்கம் சாய்ந்துள்ளதால் உத்தவ் தாக்கரே தரப்பு கலக்கத்தில் உள்ளது. ஷிண்டே அணியில் இணைந்த பின்னர் பேசிய நவி மும்பை உறுப்பினர்கள், "ஏக்நாத் ஷிண்டே யாருடைய தொலைபேசி அழைப்பையும் நிராகரித்ததில்லை. ஒரு சாதாரண கட்சித் தொண்டர் அழைத்தாலும் அவர் அழைப்பை எடுத்து பேசுகிறார்" என்று தெரிவித்தனர்.

தானே முனிசிபல் கார்ப்பரேஷனின் பதவிகாலம் தற்போது நிறைவடைந்துள்ளதால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் சிவசேனாவின் 66 உறுப்பினர்களும் ஷிண்டே பிரிவுக்கு தாவியுள்ளனர். இந்த நிலையில் தானே மாநகராட்சி தேர்தல் நடைபெற்றால் அது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். மேலும், சிவசேனாவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தராவ் அட்சுலும் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்து ஏக்நாத் ஷிண்டே முகாமில் சேர உள்ளார்.

சிவசேனா உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் அமைச்சராக இருந்த குலாப்ராவ் பாட்டீல், “ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு கட்சியின் பெருன்பான்மையை மீட்டெடுக்கும். சிவசேனாவின் மொத்தமுள்ள 18 எம்பிகளில் 12 பேர் எங்களுடன் இணையவுள்ளனர். 22 முன்னாள் எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், எனவே கட்சி எங்களுக்கே சொந்தம்” என்று கூறினார். இந்தகைய சூழலில்தான் சிவசேனா எம்.பி ராகுல் ஷெவாலே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சிவசேனா எம்.பி.க்கள் ஆதரவளிக்க உத்தரவிடுமாறு உத்தவ் தாக்கரேவை கேட்டுக்கொண்டுள்ளார். இது உத்தவ் தாக்கரேவுக்கான நெருக்குதலாக பார்க்கப்படுகிறது.

ஆட்சி பறிபோன நிலையில், தற்போது கட்சியின் நிர்வாகிகள் பெரும்பாலானோரும் ஏக்நாத் ஷிண்டே பக்கம் செல்வதால் கையறு நிலையில் உள்ளது உத்தவ் தாக்கரே அணி. மொத்தமுள்ள 55 சிவசேனா எம்எல்ஏக்களில் 40 பேர் முதல்வர் ஷிண்டேவுடன் உள்ளனர். அதுபோல பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவையும் ஷிண்டே பெற்றுவிட்டால் கட்சி அவர் பக்கம் செல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in