
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையை அழகுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி மாநகராட்சியை அரசியல் கட்சியினர் திணறடித்து வருகின்றனர். அதனை ஆளும்கட்சியே செய்வது கூடுதல் வேதனை என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
சென்னையை அழகுப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மாநகராட்சி செய்து வருகிறது. குறிப்பாக சாலை மையத்தடுப்புகளில் செடி நடுதல், மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளி மற்றும் பூங்காக்களின் சுவர்களில் ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்றுக்கள் என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
ஆனால் மாநகராட்சியின் முன்னெடுப்புகளுக்கு சவாலாக அமைந்துள்ளது அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள். தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி அரசியல் கட்சியினர் பொது இடங்களில், மாநகராட்சி பள்ளி மற்றும் பூங்கா சுவர்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இதனை அப்புறப்படுத்தவே மாநகராட்சி ஊழியர்களுக்கு நேரம் சரியாக உள்ளது எனக் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 340 புகார்கள் மூலம் 1.36 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆளுங்கட்சியினரே மாநகராட்சியின் உத்தரவை மதிப்பதில்லை. பல இடங்களில் பிறந்த நாள் முதல், கட்சி நிகழ்வுகள் வரை அனைத்திற்கும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். சில இடங்களில் தகவல் பலகைகளை மறைத்தும் போஸ்டர் ஒட்டுகின்றனர். இது பொதுமக்களுக்கு இன்னலை ஏற்படுத்து விதமாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசிய போது, ‘’பல்வேறு முயற்சிகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாக சென்னை அழகுப்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். பலமுறை போஸ்டர்கள் ஒட்டத் தடை விதித்தாலும் அதனை ஆளும்கட்சியினரே மீறுகின்றனர். அவர்களை கண்டிக்கவோ, அபராதம் விதிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு அதிகளவில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத் திட்டத்தை செயல்படுத்த ஆளுங்கட்சியினரே தடையாக உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகிறார்கள் என்பதே உண்மை.