செயல் புயல் செந்தில் பாலாஜி; திகிலில் திமுக தலைகள்!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அநேகம் எதிர்பார்த்ததே என்பதால், அதன் போக்கிலான இதர காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்திருக்கின்றன. அவற்றில் ஒன்றாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சுறுசுறுப்பான பிரச்சாரமும், வாக்காளர்களை வளைப்பதற்கு அவர் வகுத்துத் தந்த சகல உத்திகளுமாக, சக திமுக தலைவர்களே வாய் பிளந்திருக்கின்றனர்.

அண்மைக்காலமாக ஆட்சி மற்றும் கட்சியின் முக்கிய முடிவுகளிலும், வியூகங்களிலும் தவிர்க்க முடியாதவராக விஸ்வரூபமெடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. தலைமைக்கு மிகவும் நெருக்கமாகவும், விசுவாசம் மிக்கவராகவும் மிளிரும் செந்தில் பாலாஜியைப் பார்த்து, கட்சியின் மூத்த தலைவர்களே மிரள ஆரம்பித்திருக்கின்றனர். திமுகவுக்கு சவாலாக இருந்த கொங்கு மண்டலத்தை பங்கம் பார்க்க ஆரம்பித்ததில் தொடங்கி, கட்சித் தலைமை தேவைகளுக்கான பங்குகளை சிந்தாது சிதறாது சேர்ப்பது வரை செந்தில் பாலாஜி குறித்தான சிலாக்கியங்கள் ஏராளம்.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்ற ஆச்சரியங்களுக்கு இணையாக, இந்தப் போக்கு எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்ற கவலையும் திமுகவினர் மத்தியில் அலையடிக்கிறது.

ஈரோடு கிழக்கு பிரச்சார களத்தில் செந்தில் பாலாஜி
ஈரோடு கிழக்கு பிரச்சார களத்தில் செந்தில் பாலாஜி

விசுவாசத்தின் பின்னே ரகசியம்

அதிமுகவில் இருந்து அமமுக வழியே திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜியின் அரசியல் நதிமூலம், உண்மையில் திமுகவில் இருந்தே தொடங்கியது. கரூர் கல்லூரிப் படிப்பின் மத்தியில் செந்தில் குமார் என்ற துடிப்பான இளைஞரை அரசியல் பித்து ஆட்டிப் படைத்ததில் திமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். கவுன்சிலர் பொறுப்புக்கு அடுத்தபடியாக வளர அப்போதைய உள்ளூர் பெருந்தலைகள் அனுமதிக்கவில்லை. இதைப் புரிந்து கொண்டதும், அதிரடியாக அதிமுகவுக்குத் தாவினார். அப்படியே போயஸ் கார்டனின் கொல்லைப்புற சாளரமான மன்னார்குடி குடும்பத்தினரின் நம்பிக்கையை முதலில் பெற்றார். தனது விருப்பத்துக்குரிய கரூர் தான்தோன்றிமலை கடவுளை பெயரில் சேர்த்து செந்தில் குமார் செந்தில் பாலாஜியானதும், ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை விழுந்தது. அதற்குப் பிறகுதான் பாலாஜியின் அரசியல் கிராஃப் எகிறியது.

போக்குவரத்து அமைச்சர் பொறுப்பில், மினி பஸ், அம்மா குடிநீர் ஆகியவற்றை அறிமுகம் செய்து ஜெயலலிதாவின் அபிமானத்தை பெற்றார். அப்போதைய கரூர் அரசியல் கூட்டத்தில் வசைபாடிய ஸ்டாலினின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ’அதிமுக ஆட்சியில் 15 முறைக்கும் மேலாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, சீனியர்கள் பலர் காணாமல்போக, ஜூனியரான செந்தில் பாலாஜி மட்டும் நீடித்ததன்’ மர்மம் சுலபத்தில் பிடிபடாதது. இதனை செந்தில் பாலாஜி வரித்துக்கொண்ட பிரத்யேக விசுவாசத்தின் பெயரால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.

ஆளானப்பட்ட ஓபிஎஸ்ஸின் அம்மா விசுவாசத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிமுகவில் வளர்ந்து நின்றார் செந்தில் பாலாஜி. வளர்ப்பு மகன் வம்பை தொலைத்த பிறகு ஜெயலலிதா வாயார மகன் ஸ்தானத்தில் பொருந்திப் பார்த்தது செந்தில் பாலாஜியாகவே இருக்க முடியும். ஜெயலலிதா சிறை வாசத்துக்கு தயாரானபோது, முதல்வர் நாற்காலி காபந்துக்கு ஓபிஎஸ்ஸுக்கு இணையாக பரிசீலிக்கப்பட்டவர்களில் செந்தில் பாலாஜியும் இருந்தார். அப்போது செந்தில் பாலாஜிக்குள் விழுந்த முதல்வர் கனவும் அதற்கான அவரது பிரயத்தனங்களும், பிற்பாடு திமுகவுக்குத் தாவவும் அதன் உச்சாணிக்கு வளரவும், விசுவாசத்தின் பெயரில் அடுத்த பாய்ச்சல் காட்டவும் செய்திருக்கிறது.

அதிமுகவில் செந்தில் பாலாஜி
அதிமுகவில் செந்தில் பாலாஜி

ஜெயலலிதா மறைவு, கட்சி பிளவு என்றானபோது, தான் சார்ந்திருந்த சசிகலா தரப்பு ஆதரவை செந்தில் பாலாஜி கைவிடவில்லை. அமமுகவில் இணைந்தார். அதுவும் கவைக்குதவாது என்று தெரிந்து அங்கிருந்து வெளியேறியபோது, கையொடிந்தார்போல உணர்ந்தார் டிடிவி.தினகரன். அந்த கடுப்பில், “கழற்றிப்போட்ட கௌபீணம்” என்று செந்தில் பாலாஜியை வசைபாடினார். அந்தளவுக்கு தனது இருப்பை வலிக்கும்படி உணர்த்துவதில் செந்தில் பாலாஜி வித்தகர்.

மாற்று அரசியல் தலைமையிடத்தும், இப்படியொரு செயல்வீரர் நமக்கு இருந்தால் நலமே என்ற எதிர்பார்ப்பை கொளுத்திப் போடும் அளவுக்கு பாதிப்பை உண்டு பண்ணுவார். அப்படித்தான் மீண்டும் திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி. இம்முறை திமுக தலைமையிடத்து நேரடியாக நெருக்கம் பாவிக்கும் அளவுக்கு தன்னை அதிமுக முகாமில் நிரூபித்திருந்தார். இதன் விளைவாக, கரூரில் நின்று எந்த ஸ்டாலின் கிண்டல் அடித்தாரோ, அந்த ஸ்டாலின் மட்டுமல்லாது அவரது குடும்பமும் செந்தில் பாலாஜியை சகலத்திலும் நம்பும் நிலைக்கு ஆளானது.

விசுவாசம் 2.0

மிகச்சிறந்த நிர்வாகி, தலைமை இட்ட உத்தரவை செயல் புயலாய் முடித்துக்காட்டுவதில் சூரர் என்று பெயரெடுத்தது மட்டுமல்ல, ஆகச்சிறந்த வகையில் ஆதாய அனுகூலங்களை கொண்டு வந்து சேர்ப்பதில், செந்தில் பாலாஜியின் சித்துவேலைகளும் அதற்கான உத்திகளும் அத்தனை சிறப்பானவை. அதற்கான இடத்தை முன்னர் வகித்த எ.வ.வேலு உள்ளிட்ட நம்பிக்கைக்கு உரியவர்களை ஓரம்கட்டி செந்தில் பாலாஜி முன்னேறியதை, திமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தேர்தல் களத்தில் சவாலாக இருக்கும் கொங்கு மண்டலத்துக்கு பொறுப்பேற்றதாகட்டும், மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை என கொழிக்கும் துறைகளை கட்டிக் கறப்பதாகட்டும், சிந்தாமல் சிதறாமல் விசுவாசங்களை உரியோருக்கு சேர்ப்பதாகட்டும்... செந்தில் பாலாஜியின் அணுகுமுறைகள் அலாதியானவை.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

10 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தை பார்க்காது தவித்திருந்த கட்சிக்கு பாலைவனச் சோலையாக, ஆட்சி தொடங்கிய அடுத்த சில மாதங்களிலேயே பசுமை பொங்குமளவுக்கு வளம் சேர்ப்பது சாமானியக் காரியமல்ல. இந்த வகையில், முன்னர் போயஸ் கார்டனில் காட்டிய அதே விசுவாசத்தை இம்மி பிசகாது ஆழ்வார்பேட்டைக்கும் காட்டுகிறார் செந்தில் பாலாஜி. தலைமுறைகள் தாண்டி திமுகவில் ஓடாய் தேய்வோர் ஒருபுறமும், அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து வந்த போதும் தலைமையின் கடைக்கண் பார்வை கிட்டாத அரசியல் அபலைகள் மறுபுறமும் திமுகவில் நிறைந்திருக்கின்றனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக அவர்கள் வயிறு நிறைய எரிந்தும் புலம்பி வருகிறார்கள். அவற்றில் ஒன்று அடேங்கப்பா ரகம்.

‘ஷிண்டே’ ஸ்பெஷல் ரெண்டகம்

தந்தை பாலா சாகேப் தாக்கரேயின் அதிரடி அரசியலை அடியொற்றியும், அவரது தீவிர இந்துத்துவம் பாவித்த சிவசேனா கட்சியினாலும், உத்தவ் தாக்கரே எளிதில் மக்கள் அபிமானத்தில் வளர்ந்தார். ஆனால், மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக மராட்டியத்திலும் அதற்கு மல்லுக்கட்ட, அதுவரை பாஜகவுடன் தோழமை பாராட்டி தேர்தலை சந்தித்த சிவசேனா, பதவியேற்கும்போது எதிரியானது. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த சூட்டில் பாஜகவுக்கு மாற்று அரசியலைக் கட்டும் முயற்சியில், மராட்டியத்துக்கு வெளியேயும் முயற்சிகளை ஒருங்குவித்தது. தங்களது ஏகபோகமான அதே இந்துத்துவா ஏந்தி போராடும் சிவசேனாவை எதிர்கொள்ள பாஜக திணறியது. வேறுவழியின்றி தனக்கே உரிய அரசியல் சித்துக்களை மராட்டிய மண்ணிலும் பாஜக பிரயோகித்தது.

உத்தவ் தாக்கரே பின்னிருந்து முன்னகர்ந்த ஏக்நாத் ஷிண்டே
உத்தவ் தாக்கரே பின்னிருந்து முன்னகர்ந்த ஏக்நாத் ஷிண்டே

இதன் விளைவாக, சிவசேனா இரண்டாக பிளந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு, உத்தவ் தாக்கரே கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தது. பின்னர் பாஜகவுடன் கைகோத்து புதிய ஆட்சியை அமைத்தது. இதோ சில தினங்கள் முன்பாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைக் கூட, தேர்தல் ஆணையத்தின் உபயத்தால் உத்தவ் தாக்கரே வசமிருந்து ஷிண்டே பிரிவு அபகரித்திருக்கிறது. ’எங்களை எதிர்க்கும் கட்சிகளுக்கு இதுதான் பதில்’ என்று மராட்டிய மண்ணில் ஒரு காட்டுக் காட்டியிருக்கிறது பாஜக. அதற்கு எதிராக கொக்கரித்த உத்தவ் தாக்கரே இன்று அநியாயத்துக்கு அரசியல் அநாதை ஆகியிருக்கிறார்.

திமுகவின் ஷிண்டே?

தெற்கே பாஜகவை முழுமூச்சாக எதிர்த்து நிற்கும் திமுகவுக்கும் இந்த நிலை வரலாம் என்பது, பாஜக அன்பர்களின் ஆருடமாக நீடிக்கிறது. அப்படியானவர்கள் உட்பட தமிழக அரசியல் சதுரங்கத்தை வேடிக்கை பார்ப்பவர்களின் மத்தியில், ‘திமுகவின் ஷிண்டே யார்?’ என்ற கேள்வி எழுந்த வேகத்தில், ’செந்தில் பாலாஜி’ என்ற பதிலே உரக்க ஒலிக்கிறது. இதனை செந்தில் பாலாஜியும், திமுக தலைமையும் வெவ்வேறு த்வனியில் இருந்தபடி ரசித்து வருகிறார்கள். கட்சியில் மளமளவென்று அதிகாரம் பெற்று வரும் செந்தில் பாலாஜியின் வளர்ச்சியும், அவருக்கு அதிகரித்து வரும் ’பசை புலமும்’ இதற்கு கட்டியம் கூறி வருகின்றன. ஆனால், அதிமுகவில் சாத்தியமாகும் இந்த உடைப்புகள், திமுகவில் அத்தனை எளிதானதில்லை என்பதை செந்தில் பாலாஜி உட்பட விவரமான திமுகவினர் உணர்ந்தே இருக்கிறார்கள்.

திமுக தலைமையும் அத்தனை ஏமாளியல்ல என்பதையே விட்டுப்பிடிக்கும் அவர்களது போக்கு காட்டுகிறது. திமுக தலைமையைப் பொறுத்தளவில் செந்தில் பாலாஜியின் விசுவாசத்தை ஆக முடிந்த வகையில் அறுவடை செய்வதும், காரியம் முடிந்து பிரச்சினை எழும்போது கைகாட்டி விட்டு ஒதுங்கிக்கொள்ளவுமே பார்ப்பார்கள் என்ற அச்சம் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மத்தியில் நீடிக்கவே செய்கிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து பணியிடங்களை நிரப்பியதில் செந்தில் பாலாஜி தலைக்கு மேல் தொங்கும் கத்தியே, அவரை உண்டு இல்லையென்று செய்து வருகிறது. போதாதென்று தற்போதைய விசுவாச கடமைக்காக, குத்தீட்டிகளை தேடித்தேடி அமர அபாயமுள்ள சாகசங்களை எதிர்கொண்டு வருகிறார் செந்தில் பாலாஜி.

ஈரோடு கிழக்கு பிரச்சார களத்தில் செந்தில் பாலாஜி
ஈரோடு கிழக்கு பிரச்சார களத்தில் செந்தில் பாலாஜி

பிரார்த்தனை ஈடேறுமா?

இந்த சதுரங்கத்தில் செந்தில் பாலாஜிக்கும் சகாய நகர்வுகள் காத்திருக்கவே செய்கின்றன. ’விஎஸ்பி ஃபார் சிஎம்’(#VSB4CM) என்று சதா முழங்கும் செந்தில் பாலாஜிக்கான சமூக ஊடக சலம்பல்கள் இதையே காட்டுகின்றன. தமிழ்நாட்டு அரசியலில் சகலரும் எதிர்பார்த்திருக்கும் வெற்றிடம், எதிர்காலத்தில் செந்தில் பாலாஜி போன்றவர்களையும் கோரக்கூடும். இருக்கின்ற கட்சி எதுவானாலும் அடுத்தடுத்து உயர் இடங்களையே அலங்கரித்து வரும் செந்தில் பாலாஜிக்கு, அடுத்து மிச்சமிருப்பது முதல்வர் நாற்காலி மட்டுமே. அதிமுகவில் இருந்தபோது அந்த வாய்ப்பு மடியில் விழவிருந்தது. கடைசி நேரத்தில் தட்டிப்போனது. அதற்காக அங்க பிரதட்சணம் முதல் அநேக வழிபாடுகள் வரை மேற்கொண்ட செந்தில் பாலாஜியின் பிரார்த்தனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இன்னும் ஈரம் காய்ந்து விடவில்லை.

அடுத்து எதுவும் நடக்கலாம் என்பதற்கு பெயர்தான் அரசியல் எனும்போது, தமிழ்நாட்டின் ஷிண்டே பாணி அதிரடி முதல்வராகவோ, விசுவாசத்தின் பலனான துணை முதல்வராகவோ செந்தில் பாலாஜி ஆவதான கனவும், அதற்கான அவரது கமுக்கமான அடியெடுப்பும் தொடரவே செய்யும். ஓபிஎஸ், ஈபிஎஸ் என முதல்வர்களைக் கண்ட தமிழ்நாடு, விசுவாச நேசரான செந்தில் பாலாஜியை வரிந்து கொள்வதற்கும் அரசியல் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவை எம்மாதிரியானவை, அவற்றுக்கான விலை என்ன என்பதில், முழுதாய் பிடிபடாத அரசியல் விநோதங்கள் புதைந்திருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in