`குரூப்-4 தேர்வை 2023-க்குள் நடத்த வேண்டும்'- முதல்வரை வலியுறுத்தும் திருமாவளவன்

`குரூப்-4 தேர்வை 2023-க்குள் நடத்த வேண்டும்'- முதல்வரை வலியுறுத்தும் திருமாவளவன்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 2023-ம் ஆண்டுக்குள் நடத்திட வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்தான ஆண்டு திட்டத்தினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டு திட்டத்தில் அனைத்து போட்டி தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன. மேலும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு 2024-ம் ஆண்டு தான் நடைபெறும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டி தேர்வினை எழுத தயாரான சூழலில்ட, சமீபத்தில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டுத்போட்டி தேர்வர்கள் அரசு தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். இதன் காரணமாக வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தேர்வு முறைகளில் தேர்வாணையம் கொண்டுவரும் சீர்திருத்தங்களை வரவேற்கும் அதே வேளையில் தொடர்ந்து தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கேள்விகள் முறையில் உருவாக்கிவரும் மாற்றம் தேர்வுகளுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக ஓர் அயர்ச்சியையும் போட்டித் தேர்வுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வதில் ஒரு குழப்ப நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே தேர்வாணையம் போட்டித் தேர்வர்களின் மேற்கண்ட சிக்கல்களை கவனத்தில் கொண்டு நிலையான பாடத்திட்டம் மற்றும் கேள்வி கேட்கும் முறை ஆகியவற்றை சரியாக கையாள வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது. மேலும் ஆளுநர் உரையில் அரசுப்பணிகளில் 10,402 பின்னடைவு காலியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை உறுதி அளிக்கப்பட்ட நிலையில் துறை வாரியான காலி பணியிடங்கள் குறித்த விவரம் இன்னும் பெறப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் தெரியவருகிறது. ஏற்கெனவே நிரப்பப்படாத பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களுக்கான அறிவிப்பும் இந்த ஆண்டு திட்டத்தில் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அத்துடன் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் 50,000 நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் எனவும் குரூப்-1, குரூப் 2, குரூப்-4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டும். மேலும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கான நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in