யாருப்பா இந்த காந்தியின் பேரன்... குழம்பிய நெட்டிசன்கள்

எம்.ஆர்.காந்தி
எம்.ஆர்.காந்தி

நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் சீறிப்பாய்ந்து வரும் அந்த டூவீலரின் நம்பர் பிளேட் இல்லை. அதற்குப் பதிலாக, ‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி’ என எழுதியிருக்கிறது. அதை கெத்தாக நினைத்து அந்த பைக்கில் வலம்வரும் அம்ரிஷ் என்னும் வாலிபரே தன் முகநூல் பக்கத்திலும் போட, நம்பர் பிளேட்க்கு பதில் எம்.எல்.ஏ பேரன் என்னும் வாசகமா? எனக் கொதித்துப் போனார்கள் நெட்டிசன்கள்

எம்.ஆர்.காந்தியைப் பொறுத்தவரை எளிமையான மனிதர் என பெயர் எடுத்தவர். அது மட்டும் இல்லாமல் வலதுசாரி சிந்தனையில், இடதுசாரி தோற்றத்துடன் வலம்வருபவர். பாரத மாதாவை கொச்சைப்படுத்தக் கூடாது என காலுக்கு செருப்பு அணிந்துகொள்ளாதவர், திருமணமும் செய்து கொள்ளவில்லை. ஜனசங்க வளர்ச்சிக்கு தன்னை ஒப்புக்கொடுத்த எம்.ஆர்.காந்திக்கு திருமணமே ஆகாத நிலையில் எங்கே இருந்து இந்த பேரன் வந்தார்? என நெட்டிசன்கள் காவல்துறையின் உளவுத்துறை வேலை வேலையையே மிஞ்சும் அளவுக்கு யோசிக்கத் துவங்கினர்.

இதைப்பற்றி நாமும் விசாரணையில் இறங்கினோம். ‘மகாத்மா காந்தி எப்படி நமக்கெல்லாம் தாத்தாவோ, அதே உறவுதான் எம்.ஆர்.காந்திக்கும், அம்ரீஷ்க்கும்!’ எனச்சொல்லி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர். அம்ரீஷின் அப்பா, எம்.ஆர்.காந்தியின் கார் ஓட்டுனராக உள்ளார். அந்தவகையில் அம்ரீஷ் குடும்பத்தோடு, எம்.ஆர்.காந்தி மிகவும் நெருங்கிய நட்பில் இருந்தார். அந்த உரிமையில் தாத்தா, பேரன் என அன்பு இருந்தது. அந்த அன்பு மிகுதியால் எம்.ஆர்.காந்தியின் பேரன் என வண்டி முகப்பிலும் போட்டுள்ளார் அம்ரீஷ்.

தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் பெயர், சின்னம், தன் மனதுக்குப் பிடித்த நடிகர், தலைவர் என இளைஞர்கள் தங்கள் டூவீலரில் முத்திரை குத்திக்கொள்வது சகஜம் தான். ஆனால் நம்பர் பிளேட்டைத் துறந்துவிட்டு, இப்படி எழுதிக் கொள்வதில் பெருமைப்பட ஏதும் இல்லை தானே?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in