பிரதமர் மோடி திறந்துவைத்த பிரம்மாண்ட சாலை... 5 நாள் மழையில் சிதைந்த கொடுமை: பாஜக எம்.பி கேலி!

பிரதமர் மோடி திறந்துவைத்த பிரம்மாண்ட சாலை... 5 நாள் மழையில் சிதைந்த கொடுமை: பாஜக எம்.பி கேலி!

உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புத்தம் புதிய பண்டேல்கண்ட் விரைவுச் சாலை ஐந்து நாள் மழையைக் கூட தாங்காமல் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனைக் கடுமையாக விமர்சித்த பாஜக எம்.பி வருண் காந்தி, கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

296 கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையின் சில பகுதிகள் ஜலான் மாவட்டத்திற்கு அருகிலுள்ள சிதைந்து சேதமானது. மேலும், வியாழக்கிழமையன்று பெய்த கனமழையால் பல இடங்களில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

பண்டேல்கண்ட் சாலைப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்.பி வருண் காந்தி, “15,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த விரைவுச் சாலை 5 நாட்கள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்றால், அதன் தரம் குறித்து தீவிரமான கேள்விகள் எழுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார்.

இந்த சாலையில் ஏற்பட்ட சேதங்களை பழுதுபார்க்கும் பணிக்காக பல புல்டோசர்கள் வேலை செய்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து பள்ளங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு, சாலை போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும், விரைவுச் சாலை தொடர்பாக பாஜகவை விமர்சித்ததுள்ளார். “இது பாஜகவின் அரைகுறை வளர்ச்சியின், தரத்தின் எடுத்துக்காட்டு. பண்டேல்கண்ட் விரைவுச்சாலை பெரியவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அதில் இருந்த மிகப்பெரிய ஊழல் குழி வெளிவந்தது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை கடுமையாக விமர்சித்தது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. பண்டா,மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஔரையா மற்றும் எட்டாவா உள்ளிட்ட 8 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த சாலையை ஜூலை 16-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர், “இந்த விரைவுச் சாலையானது வளர்ச்சி, சுய வேலைவாய்ப்பு இன்னும் பிற தொழில் வாய்ப்புகளுக்கு இட்டுச் செல்லும். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரமும், சாலை விரிவாக்கமும் சரி செய்யப்பட்டால் இந்த மாநிலம் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும். பாஜக ஆட்சியில் இந்த இரண்டுமே தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in