படை திரட்டிய பன்னீர் செல்வம் மகன்: ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு `கிலி'

படை திரட்டிய பன்னீர் செல்வம் மகன்: ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு `கிலி'

முன்னாள் எம்எல்ஏ பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டியில் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என எடப்பாடி பழனிசாமி பற்றவைத்த தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். இதையடுத்து, அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஈபிஎஸ் நிராகரித்தார். டிடிவி வரவேற்றார். சசிகலாவும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறிவருகிறார்.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது. இந்நிலையில், தங்களின் கருத்தை கேட்காமல் தீர்ப்பு அளிக்கக்கூடாது என ஈபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.

2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற போட்டி ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே கடுமையாக நிலவி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஈபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஓபிஎஸ் பக்கம் குறைவானவர்களே இருக்கின்றனர். தொண்டர்கள் ஓபிஎஸ்சையே ஆதரிக்கின்றனர் என்று பரவலாக கருத்து நிலவி வருகிறது. எனினும், ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் என பிரிந்து கிடக்கும் அதிமுக ஒரே குடைக்குள் வர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் தங்கள் பலத்தை காட்ட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான மகன் ரவீந்திரநாத்தை களமிறங்கியுள்ளார் ஓபிஎஸ். முன்னாள் எம்எல்ஏ பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளருமான ரவீந்திரநாத் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினரும், ராமநாதபுர மாவட்ட செயலாளருமான ஆர்.தர்மர், தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இன்று அஞ்சலி செலுத்தினர். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் நடத்திய இந்தப் பேரணி உசிலம்பட்டி குலுங்கினாலும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு `கிலி'யை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அதிமுகவில் வேறு என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in