
கிராம ஊராட்சிகளுக்கான கிராம சபைக் கூட்டத்திற்கான செலவு தொகையை ஐந்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளை மேம்படுத்தவும், மக்களுக்கும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தவுமே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை சுதந்திர தினம், குடியரசுத்தினம், தொழிலாளர்கள் தினம், காந்தி பிறந்ததினம் ஆகிய நான்கு நாள்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடந்துவந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனோடு மார்ச் 22 உலக தண்ணீர் தினம், நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்தார்.
இதன்மூலம் ஒரு கிராம ஊராட்சியில் வருடத்திற்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடைபெறும். இது தவிர, முக்கியமான விவாதங்களுக்காக அந்த, அந்த கிராம ஊராட்சிகள் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தையும் கூட்ட முடியும்.
இந்நிலையில், கிராமசபைக் கூட்டங்களுக்கான செலவு தொகையை 5 மடங்காக உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை. அதில், ‘கடந்த 2008-ம் ஆண்டு வெளியான அரசாணையின்படி, கிராம சபைக் கூட்டத்தை நடத்த கிராம ஊராட்சி நிதியிலிருந்து அதிகபட்சமாக 1,000 ரூபாய் செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கான செலவு தொகையை 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
கிராம சபை, சிறப்பு கிராம சபை நடைபெறும் நாட்களில் ஊராட்சிமன்ற ஒப்புதலுடன், ஊராட்சிப் பொதுநிதியிலிருந்து இந்தச் செலவுகளை மேற்கொள்ளவும் ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு அமர்வு படி வழங்கப்படுவது வழக்கம். அந்தத் தொகையும் இதன்மூலம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.