யூடியூப்பர் மாரிதாஸ் வழக்கில் ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லாது: அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

யூடியூப்பர் மாரிதாஸ் வழக்கில்  ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லாது: அதிரடி காட்டிய  உச்ச நீதிமன்றம்

யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது. இதில் இந்தியாவின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருகிறது என்று மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவாளரான யூடியூப்பர் மாரிதாஸ் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக மாரிதாஸ் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி மாரிதாஸை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மறுநாளே யூடியூப்பர் மாரிதாஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரிதாஸ் மீதான வழக்கில் புலன் விசாரணை நடத்த காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உரிய அவகாசம் தரவில்லை. மேலும் 4 நாட்களில் அவசரமாக வழக்கை ரத்து செய்தது அதிருப்தி அளிப்பதாக கூறி உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மாரிதாஸ் மீதான வழக்கில் காவல் துறையின் புலன் விசாரணை நடத்த வசதியாக உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கில் போலீஸ் விசாரணை தொடர்வதற்கான தடை நீங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in