மீனவர் குடும்பத்துக்கு அரசு வேலை; 25 லட்சம் நிவாரணம் வழங்கவும்: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தப்பாடியை சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14-ம் தேதி காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது, அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராஜா என்ற காரவடையான் உயிரிழந்தார். இதனால் இருமாநில எல்லையில் பதற்றம் நிலவியது. ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை வாங்கினர். இதனிடையே, மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், மீனவர் ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in