ஆசிட் குடித்த அம்மா தொழிற்சங்க ஓட்டுநர்: பணிமனையில் பரபரப்பை ஏற்படுத்திய மனைவி!

ஆசிட் குடித்த அம்மா தொழிற்சங்க ஓட்டுநர்: பணிமனையில் பரபரப்பை ஏற்படுத்திய மனைவி!

பணிக்கு வந்த ஓட்டுநருக்கு பேருந்து வழங்காமல் நிர்வாகத்தினர் தொடர்ந்து அலைக்கழித்த காரணத்தால், அந்த ஓட்டுநர் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(38), இவர் பூந்தமல்லி அரசுப் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலை அவர் பணிக்கு வந்துள்ளார். அவர் இயக்குவதற்கான பேருந்தைக் கொடுக்காமல் பணிமனை மேலாளர் மற்றும் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவக்குமார், பணிமனை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் முறையாகப் பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சிவக்குமார் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் சிவக்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் பூந்தமல்லி பணிமனைக்குச் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சிவக்குமார் அதிமுகவின் அம்மா தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அதிகாரிகள் வெள்ளை நிற போர்டு பேருந்தை இயக்க வற்புறுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in