ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: காலாவதியானது ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம்!

ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: காலாவதியானது ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம்!

தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அந்த சட்ட மசோதா நேற்று நள்ளிரவோடு காலாவதியாகிவிட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்யும் அவல நிலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 32க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான் ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம். இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்க அமைக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்பின் ஆன்லைன் தடை சட்டம் கொண்டு வரலாம் என்று தமிழக அரசுக்கு அந்த குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த செப்டம்பர் 26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம் அக்டோபர் 3-ம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்மூலம், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பப்பட்டது.

இதனிடையே, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “அவசர சட்டத்துக்கான ஒப்புதலை ஆளுநர் அன்றே அளித்தார். அதில் இருந்த அதே ஷரத்துகள்தான் இந்த சட்ட மசோதாவிலும் இருக்கிறது. ஆனால், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவருக்கு சந்தேகம் இருந்தால், அதை தெளிவுபடுத்துவோம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய கேள்விக்கு அடுத்த நாளே தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் இது எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், ஆன்லைன் சூதாட்ட அவரச தடைச் சட்டம் நேற்று நள்ளிரவோடு காலாவதி ஆகிவிட்ட நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் தடையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in