அதிகாரத்தைக் குறைக்க முடிவு: தமிழகத்தை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக களமிறங்கியது கேரள அரசு!

அதிகாரத்தைக் குறைக்க முடிவு: தமிழகத்தை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக களமிறங்கியது கேரள அரசு!

கேரளத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் சட்டதிருத்த மசோதாவுக்கு பினராயி விஜயன் தலைமையிலான கேரள அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதில் உச்சமாக கேரளத்தில் அதிகளவில் வரதட்சணை மரணங்கள் நடப்பதாக ஆளுநர் ஆரிப் முகமதுகான் உண்ணாவிரதமே இருந்தார். இதேபோல் கேரளத்தில் அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் ஆரிப் முகமதுகானின் தலையீடுகள் அதிகம் இருப்பதாக இடதுசாரிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள ஆளுநர் அம்மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் சட்டதிருத்தம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. இதை பினராயி விஜயனின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரளத்தில் சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய நாளில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதேநேரம் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பதில் இது முதல்படி மட்டும்தான் என்கின்றார்கள் இடதுசாரிகள். படிப்படியாக ஆளுநரின் பல்வேறு தலையீட்டு அதிகாரத்தையும் ஒரு வரம்பிற்குள் கொண்டுவர சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறாராம் முதல்வர் பினராயி விஜயன்.

தமிழக அரசும், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் சட்டதிருத்தம் கொண்டு வந்து ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளது. அந்த மசோதாவை ஆளுநர் இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பாமல் வைத்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in