ஆளுநர்களிடமிருந்து ஜனநாயகத்தை எவ்வாறு காப்பாற்றுவது? - அர்விந்த் கேஜ்ரிவால் ஆதங்கம்

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களால் நாட்டில் பல மாநிலங்கள் துன்புறுத்தப்படுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குடியரசு தின விழாவில் இன்று உரையாற்றிய அர்விந்த் கேஜ்ரிவால், “74வது குடியரசு தினத்தில், ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநரிடமிருந்து ஜனநாயகத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த நாட்களில், மத்திய அரசு நீதித்துறையுடன் சண்டையிடுகிறார்கள். அவர்கள் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் சண்டையிடுகிறார்கள். நாம் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டால், இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது" என்று கூறினார்.

தெலங்கானாவிற்கு சென்ற தனது சமீபத்திய பயணத்தை மேற்கோள் காட்டிய கேஜ்ரிவால், தெலங்கானாவில் 4 கோடி மக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை அளிக்க அங்குள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

"நாங்கள் டெல்லியிலும் அதைச் செய்வோம். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இது நாட்டில் உள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிக்கும். நாட்டில் 99 சதவீத வர்த்தகர்கள் வரி செலுத்த விரும்புகிறார்கள். ஆனால், முழு ஜிஎஸ்டி முறையையும் எளிமையாக்க வேண்டும்” என்றார்

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த அவர், "இன்றைய நாட்களில் மாநில அரசுகள் துன்புறுத்தப்படுகின்றன. நமது சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் செய்தது இதற்காக அல்ல. நாட்டில் ஜனநாயகத்தின் மீது இருள் நிழல் படுகிறதா?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மிக உயர்ந்தவை, அவற்றுக்கு மேல் யாரும் இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in