ஸ்டாலினுக்கு இடையூறு தரவே ஆளுநராக்கப்படுகிறார் ஆர்.என்.ரவி

கே.எஸ்.அழகிரி கண்டனம்
ஸ்டாலினுக்கு இடையூறு தரவே ஆளுநராக்கப்படுகிறார் ஆர்.என்.ரவி
வரதராஜன் பேட்டையில் தொண்டர்களிடம் உரையாற்றும் கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் ஆளுநராக முன்னாள் உளவுத் துறை அதிகாரி நியமிக்கப்பட்டது நல்ல மரபு அல்ல என்றும், அதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த கே.எஸ்.அழகிரி, திருமணத்துக்குப் பின்னர், அந்த ஊரில் இருக்கும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

’’தமிழ்நாடு என்பது ஜனநாயகமிக்க இந்தியாவின் ஒரு மாநிலம். இங்கு வருகின்ற ஆளுநர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது ஏதாவது ஒரு துறையில் புகழ்பெற்றவராகவோ இருக்க வேண்டும். ஆனால் உளவுத் துறையைச் சேர்ந்த ஒருவரைத் தமிழகத்தின் ஆளுநராக நியமித்திருப்பது நல்ல மரபு அல்ல. முழுக்க முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக ஆளுநராக நியமிக்கப்  பட்டிருக்கும் ரவி
தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டிருக்கும் ரவி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே, இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம். உதாரணத்துக்கு முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரண் பேடியைப் புதுச்சேரி ஆளுநராக நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது.

ஜனநாயகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் தமிழகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

நிவாரண உதவிகள் வழங்கும் அழகிரி
நிவாரண உதவிகள் வழங்கும் அழகிரி

தொடர்ந்து பேசிய அவர், “கோடநாடு விஷயத்தில் விசாரணையை முன்னாள் முதல்வர் எதிர்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. விசாரணைக்கு உட்படுவதுதான் ஜனநாயக முறையாகும். சிஏஏ தீர்மானத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறோம். ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் அரிச்சுவடியின் அடிப்படை கூட தெரியாத பயங்கரவாத அரசாங்கமாகும். சீனா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கின்றன என்பதற்காக இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் ஆதரிக்கக் கூடாது” என்று கூறினார்.

Related Stories

No stories found.