
’தமிழகம்’ என தான் குறிப்பிட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ள நிலையில் அவரது கருத்துக்களை வரவேற்பதாக தமிழ்நாடு சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சையை ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்கது விஷயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும். இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள்.
நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆளுநர் அவர்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. இதனால், ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.