தமிழ்நாடு மக்களிடமும், அரசிடமும் ஆளுநர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு மக்களிடமும், அரசிடமும் ஆளுநர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் என்.ரவி உரையுடன் தொடங்கினார். அப்போது திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற வார்ததைகளை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதற்கு ஆளுநர் முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்றும் தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அவை மீறல் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும்.

மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப் போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in