ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: திமுக அதிரடி நடவடிக்கை காரணமா?

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: திமுக அதிரடி நடவடிக்கை காரணமா?

ஆளுநரை திரும்ப பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் மனு அளிக்க உள்ள நிலையில் ஆர்.என்.ரவி திடீரென இன்று டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே பிரச்சினை நீடித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசு அனுப்பும் முக்கிய கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதுதான் பிரச்சினைக்கு காரணம். நீட் விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை பல மாதங்களாக கிடப்பில் போட்டார் ஆளுநர். பின்னர் அந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். மேலும் நீட் தேர்வு குறித்தும் ஆதரவான கருத்து தெரிவித்தார் ஆளுநர். இது தமிழக அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடரந்து நீட் விலக்கு மசோதா சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேறு வழியின்றி ஆளுநர் அந்த நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

மேலும் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார். இதனிடையே ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவருக்கு மனு அனுப்ப திமுக திட்டம் தீட்டி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்து பெறும் நடவடிக்கையை திமுக இறங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் ரவி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in