சர்ச்சை... சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்...ஆளுநர் ரவி முட்டுக்கட்டை!

என்.சங்கரய்யா
என்.சங்கரய்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர ஆளுநர் ரவி மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1922 ஜூலை 15-ம் தேதி பிறந்த சங்கரய்யா, சுதந்திர போராட்டத்தில், எட்டு ஆண்டுகளை சிறையில் கழித்தவர். 100 வயதைக் கடந்த இவர், தமிழின வளர்ச்சிக்காக உழைத்தவர், மாணவ தலைவர்.

தமிழ் சமூகத்திற்கு இவர் ஆற்றியுள்ள சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ஆக.18-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டத்தில், அவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.என்.ரவி, பொன்முடி
ஆர்.என்.ரவி, பொன்முடி

கடந்த மாதம் 20-ம் தேதி நடந்த, பல்கலைக்கழக ஆட்சி பேரவை கூட்டத்தில், எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில், அவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுரவ முனைவர் பட்டம் அல்லது சான்றிதழில், பல்கலைக்கழக வேந்தர் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, முனைவர் பட்டம் வழங்க அனுமதி கோரும் கோப்பு, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் அவர், அதில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நவம்பர் 2-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலையில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன், என்.சங்கரய்யா, ஆர்.என்.ரவி
கே.பாலகிருஷ்ணன், என்.சங்கரய்யா, ஆர்.என்.ரவி

கையெழுத்திட மறுப்பு தெரிவித்த ஆளுநரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள். அவரால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராத கூட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in