பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்!

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்!

தமிழகம் வந்த பிரதமருக்குப் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா எனத் தமிழக அரசிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, "தமிழகத்திற்குப் பிரதமர் வருகை தந்த போது எந்த விதமான பாதுகாப்பு குறைபாடு நடந்ததாக எந்த விதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பிரதமருக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அது மட்டுமின்றி  தமிழகக் காவல்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகக் காவல்துறையில் பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது." எனத் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கக் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி பிரதமர் மோடி தமிழகம்  வந்திருந்தார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டிருந்ததாகவும், முக்கிய பாதுகாப்பு உபகரணங்களான மெட்டல் டிடெக்டர், டோர் மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகள் பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் பெயரளவுக்கு இருந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டியிருந்தார்.  இதுதொடர்பாக கடந்த 29-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறும் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசிடம்  ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது வேலை செய்யாத மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுத்தப்பட்டதா, பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in