திமுக பேச்சாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு: களமிறங்கிய ஆளுநர் ரவி

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

அவதூறாக விமர்சனம் செய்த திமுக திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தமிழ்நாடு' என்பதற்கு பதில் 'தமிழகம்' என அழைக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளைத் தவிர்த்து பேசியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின், தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் தேசிய கீதம் இசைக்கப்படும் முன் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை மரபை ஆளுநர் மீறிவிட்டார் என்று அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ரவி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, ஆளுநர் ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகையின் துணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆளுநர் செயலாளர், திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பேச்சாளருக்கு எதிராக ஆளுநர் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in