பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை
அண்ணாமலைபள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அரசுப்பள்ளி கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ‘’ சிதிலமடைந்து கிடக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.

நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். நேற்று ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடந்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், இது போல அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது.

ஆனால், அரசு இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன.

தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அரசுப் பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திறனற்ற திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தனது துறை நாட்டின் எதிர்காலத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in