தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

சொத்து வரி விவகாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்!

"சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது எப்போது? 100 முதல் 200 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டதா? இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரிவிதிப்புகள் இல்லாமல், அரசு நிர்வாகம் நடைபெற இயலாது. ஆனால், வரிவிதிப்புகள் மக்கள் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். தாறுமாறான வரிவிதிப்புகள் அபரிமிதமான விலை உயர்வுக்கும், மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, அவர்களை வீதிக்கு வந்து போராடவும் தூண்டும். கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், ரஷ்ய - உக்ரைன் போரால் ஏற்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுகளினால் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளினுடைய சொத்து வரிகளை அபரிமிதமாக உயர்த்தி, மார்ச் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி மாலை தான் பத்திரிகைகளுக்குச் செய்தியாகப் பகிரப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில், முகாமிட்டிருக்கி்றபோது, அவருக்குத் தெரியாமலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்று திமுகவின் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர் ஒருவர் ’வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். முதல்வரின் அனுமதி இல்லாமல் இந்த உத்தரவு எப்படிப் பிறப்பிக்க முடியும்?

மத்திய அரசினுடைய 15-வது நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையிலேயே, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலி மனைகள், கல்விக்கூடங்கள் என அனைத்திற்கும் 100 முதல் 200 சதவிகித வரி அதிகரிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக, இந்த வரி உயர்வை நியாயப்படுத்தி, மொத்த பழியையும் மத்திய அரசின் மீது சுமத்தி அமைச்சர் நேரு அவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்.

மத்திய அரசினுடைய 15-வது நிதிக் குழு எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் தேதியில் இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியது என்பது குறித்தும், 100 முதல் 200 சதவிகிதம் வரியை உயர்த்த வேண்டும் என ஏதாவது கட்டளையை மத்திய அரசின் நிதி கமிஷன் சொல்லியிருக்கிறதா? அப்படி இருந்தால் அது குறித்தும், மத்திய நிதிக்குழு, நகர்ப்புற சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டிருந்தால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஏன் அதை அமலுக்குக் கொண்டு வரவில்லை? என்பது குறித்தும், ஒவ்வொரு செயலுக்கும் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ எனக் குறைத்துப் பேசிக் குற்றம் சுமத்துபவர்கள் மத்திய அரசின் நிதிக்குழு அறிக்கையை மட்டும் சிறிதும் பரிசீலிக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் ஏன் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது? என்பது குறித்தும், தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in