எல்லோரையும் திருப்திப்படுத்துவது எளிதல்ல முதல்வரே!

தினசரி ‘மண்டகப்படி’யை எதிர்கொள்ளும் திமுக அரசு
எல்லோரையும்  திருப்திப்படுத்துவது எளிதல்ல முதல்வரே!
முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்திவிட வேண்டும் என்று செயல்பட்டுக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. மணிமண்டபம் கட்டினாலும் சரி, சிலை வைத்தாலும் சரி அதிலும் அனைத்துத் தரப்பினரையும் அனுசரிக்கும் விதமாகவே அறிவிப்புகள் இருக்கின்றன. மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் என்று பல தரப்பையும் திருப்திப்படுத்திவிட வேண்டும் எனும் முனைப்பு அரசின் அறிவிப்புகள், திட்டங்களில் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல என்பதே நிதர்சனம். அரசும், முதல்வரும் எதைச் செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து விமர்சிப்பதை மட்டுமே சிலர் முழுநேர வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் அதிகம் இருக்கிறதோ இல்லையோ சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருப்பவற்றை குறைசொல்லியும், செய்யாதவற்றை சுட்டிக்காட்டியும் ‘விடியல்’ அரசைக் குத்திக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்.

விமர்சனத்துக்குத் தப்பாத தேர்தல் ஆணையம், நீதிமன்றம்

செப்டம்பர் 13-ம் தேதி மாலையில் தமிழகத் தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தது. அந்தச் செய்தியைவிட, ‘’234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடத்தத் தெரிந்த தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்துவதன் நோக்கம் என்ன? பேசாமல் ‘திமுகவின் தேர்தல் ஆணையம்’ என்று பெயர் மாற்றம் செய்துவிடலாமே” என்ற பதிவுதான் அதிகம் பரவியது.

கருணாநிதி நினைவிடத்துக்கு வழக்கு என்றாலோ அல்லது மற்ற வழக்குகள் என்றலோ விடிய விடிய நீதிமன்றம் திறந்து வழக்கு நடத்தும் நீதிபதிகள், அனைத்து சாதி அர்ச்சகர்கள் வழக்கு என்றால் 4 வாரம், 6 வாரம் என தள்ளிவைப்பதும், நீதிபதிகள் விடுப்பில் போவதுமாக இருப்பதும் நடப்பதன் மர்மம் என்னவோ என்று நீதிமன்றங்கள் மீதும் விமர்சனங்கள் எழுகின்றன.

அடுத்தடுத்து விமர்சனக் கணைகள்

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அதை அமல்படுத்தினால் இன்னும் 10 வருடங்களில் அரசின் 100 சதவீத வருமானத்தையும் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும், ஓய்வூதியத்துக்கும்தான் செலவிட வேண்டி இருக்கும் என்பதாகக் கூறினார். அதை வைத்துக் கடுமையான பதிவுகளை எழுதிய திமுக எதிர்ப்பாளர்கள், “போற போக்கப் பார்த்தா, அடுத்த வருஷம் சம்பளத்துக்கே பெப்பேதான் போலிருக்கே” என்று நக்கலடித்தார்கள். தொடர்ந்து அமைச்சரின் பேச்சை வலைதளங்களில் பரப்பி, அரசுக்கு எதிரான மனநிலையை அரசு ஊழியர்களிடம் உருவாக்கும் வேலையும் நடந்துவருகிறது.

தமிழகத்துக்குப் புதிய ஆளுநரை நியமிப்பது என்பது மத்திய அரசின் வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், அதைவைத்து திமுக அரசுக்குக் கிலிபிடிக்க வைக்கும் அளவுக்கு ‘பில்டப்’ செய்துவிட்டார்கள்.

இதுகுறித்து, ’’விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது. வடகிழக்கில் மிக நீண்ட அனுபவம் கொண்ட, அதாவது கிறிஸ்தவ மிஷினரிகளால் குழப்பம் அடைந்து மிக பெரிய மிரட்டலாக உருவெடுத்த அந்த மாநிலங்களில் அவர்களின் சதியினை முறியடித்த ரவியைத் தமிழகத்துக்கு ஆளுநராக நியமிக்கிறது மோடி அரசு. மொத்தத்தில் குட்டிச்சாத்தான்கள் தலைவிரித்து ஆடத் தொடங்கிய நிலையில் சக்திவாய்ந்த தேவதையைத் தமிழகத்துக்கு அனுப்புகிறார் மோடி.

இனி தமிழகக் காட்சிகள் ஒவ்வொன்றாய் மாறும். இந்த திராவிட அழிச்சாட்டியம், புலி, பிரிவினைவாதம், ஒன்றியம்... இன்னும் மகா மட்டமான தேசப் பிரிவினைவாதமெல்லாம் அடங்கும். இனி மெல்லச் செழிக்கும் தமிழகம். வினை தீர்க்கும் விநாயகனின் நாளில் தமிழக கொடும் வினைகளெல்லாம் தீரட்டும்” என்று நீள்கிறது ஒரு ‘தேசாபிமானி’யின் பதிவு.

சிலை அறிவுப்புக்கு எதிரான சீற்றம்

பெரியாருக்குச் சிலை வைக்கப்படும் என்ற அறிவித்தார் ஸ்டாலின். அதற்கும் எதிர்ப்பாளர்கள் கிளம்பிவிட்டார்கள். “தமிழகம் இவ்வளவு கடன் சுமையில் இருக்க, ஈவேராவுக்குச் சிலை எதற்கு?” என்று கிளர்ந்து எழுந்தவர்கள், “சர்தார் வல்லபாய் படேலுக்கு இரும்புச் சிலையும், புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் தேவையா என்று கேள்வி கேட்டவர்கள் பெரியாருக்கு139 அடி உயரச் சிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மணிமண்டபம் என்றதும் ஆஹா ஓஹோவென்று பாராட்டுகிறார்கள். உங்களுக்கு வந்தால்தான் ரத்தமா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் சொன்னவுடனேயே, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். இப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவரே பாராட்டினாலும்கூட, அதையும் ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பாளர்களுக்கு மனமில்லை.

“நிதிச்சுமை இருக்கும்போது 39 கோடியில் நினைவிடம் எதற்கு? இப்போது எதற்கு அரசின் பணத்தை இதற்காக செலவழிக்க வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின்
குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின்

கரோனா காலத்தில் மக்கள் நலன் காக்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை என்றதும், அது எப்படி தடை விதிக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பக்தர்கள் பொங்கிவிட்டார்கள்.

அரசு ஊழியர்களைத் திரட்டும் முயற்சி

இதற்கிடையில், “அகவிலைப்படி உயர்வு என்னாச்சு?” என்று அரசு ஊழியர்கள் பலர் குரல் எழுப்பினார்கள். இந்நிலையில் அகவிலைப்படி உயர்வை ஸ்டாலின் அறிவித்ததும் திமுக எதிர்ப்பாளர்கள் அடுத்த கட்டத்துக்குப் போனார்கள். 3 மாதத்துக்கு முன்னதாகவே அகவிலைப்படி அறிவித்ததால், அரசுக்கு ரூ.620 கோடி கூடுதல் செலவு என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியதைப் பிடித்துக்கொண்டார்கள். “இதற்குப் பதிலாக அரசு ஊழியர்கள் 18 மாதங்கள் தங்களது அகவிலைப்படியையும், சரண் விடுப்பூதியத்தையும் இழந்து அரசுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தித் தந்து கரோனா நெருக்கடியைச் சமாளிக்க உதவியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி கூறாமல் செலவை மட்டுமே சொல்லி அரசு ஊழியர்கள் மீது கசப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமே என்று சாதாரண அரசு ஊழியர் மனம் வேதனைப்படுகிறது” என சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.

பொள்ளாச்சி காசிப்பட்டினம் திமுக கிளைச்செயலாளர் மீது பாலியல் சீண்டல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதும், திமுக எதிர்ப்பாளர்கள் பொங்கியெழுந்தார்கள். “பொள்ளாச்சி பாலியல் பிரச்சினைக்காகப் பொங்குன ஜோதிமணி, கனிமொழியை திமுக உபிஸ் எல்லாம் கூட்டிக்கிட்டு வந்து பதில் சொல்லுங்க” என்று காட்டமாகப் பதிவுகளை இட்டனர்.

போதாக்குறைக்கு, சங்கத்தமிழ் இலக்கியங்களை தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திப்பதாக சீமான் உள்ளிட்டோர் சீறிவிழுந்தார்கள். அது சமூக வலைதளங்களிலும் தீயாகப் பரவியது.

ஆனால், “சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்குத் ‘திராவிடக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டவில்லை; கால்டுவெல் காலத்திலிருந்து தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட காலம் வரை உள்ள 150 ஆண்டு கால வரலாற்றில் திராவிடச் சிந்தனையாளர்களின் கருத்துகள், மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, இடஒதுக்கீடு, சமூகநீதி போன்றவை குறித்த கட்டுரைத் தொகுப்புக்குத்தான் ‘திராவிடக் களஞ்சியம்’ என்று பெயர் வைக்கப்படும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கினாலும் அவர்கள் விடுவதாக இல்லை.

அதேபோல் தான், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு வரவேற்பு அளிப்பதற்காக கம்பம் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 வயது தினேஷ் என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தை வைத்து, திமுக அரசை உண்டு இல்லையென்று செய்துவிட்டார்கள்.

“அந்தச் சம்பவம் தொடர்பாக தலைவர்கள் யாரும் அறிக்கை விடவில்லை; எந்தச் சேனலிலும் பெயளவுக்குக்கூட விவாதம் நடக்கவில்லை. ஸ்டாலின் 10 லட்சத்தைத் தூக்கிக்கொண்டு இன்னும் ஓடவில்லை. கனிமொழி இன்னும் போராட்டம் செய்யவில்லை. காரணம், இது நடந்தது, திமுக ஆட்சியில்” என்று காட்டமாக விமர்சித்தார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். செப்டம்பர் 13-ல், நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கும் பாராட்டுகள் வரவில்லை. நீட்டுக்கு எதிராக மசோதா வரப்போகிறது என்று தெரிந்தவுடனேயே முந்திக்கொண்டு ஒருநாள் முன்னதாகவே நீட்டை மத்திய அரசு நடத்திவிட்டது என்று கிண்டலடித்தார்கள்.

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

‘முகம்காட்டாத சமூக விரோதிகள் விமர்சிக்கிறார்கள்’

இப்படியெல்லாம் தமிழக அரசு விமர்சிக்கப்படுகிறதே என்று தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடம் கேட்டோம். “இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு இந்தக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறது தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு. எதைச் செய்தாலும் தமிழத்தின் ஒட்டுமொத்த ஆதரவோடு செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து அரசை நடத்திச்செல்கிறார் முதல்வர். அதனால் அவரை எதிர்க்கவோ, குறைசொல்லவோ வாய்ப்பில்லை. அதைத்தான் சில சமூகவிரோதிகளால் தாங்க முடியவில்லை.

தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் எதற்கெடுத்தாலும் விமர்சிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதையெல்லாம் முதல்வர் பொருட்படுத்தாமல் அனைத்துத் துறைகளையும் சீர்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமோ தமிழக அரசுக்கும், முதல்வருக்குக் கிடையாது” என்று சொன்னார் விஜயன்.

“இதேபோன்றுதான் தொட்டதற்கெல்லாம் விமர்சிக்கப்பட்டது எங்கள் அரசு. முதல்வர் என்ற பதவிக்குக்கூட மரியாதை தராமல் சமூக வலைதளங்களில் பலர் எடப்பாடி பழனிசாமியை என்னென்னவோ சொல்லி விமர்சித்தார்கள். அப்போது அதை அரசியாலாக்கி ரசித்தவர்கள், இப்போது அதேபோன்ற வெறுப்புக் கணைகளை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் இருப்பதுதான் காலத்தின் கோலம்’’ என்கிறார்கள் அதிமுக-வினர்.

எதிர்க்கட்சியாக இருப்பது சுலபம். அன்றாடம் அரசை விமர்சித்து ஆயிரம் அறிக்கைகள் விடலாம். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட்டால், சகல திசைகளிலிருந்தும் சாட்டைகள் சுழலும். திமுக அந்த நிதர்சனத்தை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறது!

Related Stories

No stories found.