‘மத்திய அரசு ஒருபோதும் உண்மையைப் பேச விரும்புவதில்லை’ - பெகாசஸ் விவகாரம் குறித்து கார்கே பதிலடி

மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே‘மத்திய அரசு ஒருபோதும் உண்மையைப் பேச விரும்புவதில்லை’ - பெகாசஸ் விவகாரம் குறித்து கார்கே கருத்து

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இது குறித்து மத்திய அரசைத் தாக்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் ஒருபோதும் உண்மையைப் பேச விரும்பவில்லை" என்று கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , "நாங்கள் இந்த பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பிரச்சினையை பலமுறை நாடாளுமன்றத்தில் எழுப்பியும் அரசு இதற்கு பதிலளிக்கவில்லை. காங்கிரஸ் அல்லது தனிப்பட்ட ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த சபையும் இந்த பிரச்சினையை எழுப்பியது, ஆனால் அரசாங்கம் இந்த பிரச்சினையில் உண்மையை சொல்ல விரும்பவில்லை. பலரது போன்களும் ஒட்டு கேட்கப்படுகிறது. அதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை, ஆனால் இது அனைவருக்கும் தெரியும். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் என எந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கான ஆதாரத்தைக் கேட்கிறார்கள்" என்று கூறினார்

சமீபத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இஸ்ரேலிய ஸ்பைவேரான பெகாசஸ் மூலம் தனது போன் உளவு பார்க்கப்பட்டதாகவும், போனில் பேசுவது குறித்து கவனமாக இருக்குமாறு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்ததாகவும் கூறினார். அவர், "எனது போனில் பெகாசஸ் இருந்தது. ஏராளமான அரசியல்வாதிகளின் போன்களில் பெகாசஸ் இருந்தது. உளவுத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து, நீங்கள் போனில் என்ன சொல்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், ஏனென்றால் நாங்கள் விஷயங்களை பதிவு செய்கிறோம் என்று எச்சரித்தனர்” எனக் கூறியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியை கடுமையாக சாடியதோடு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்புவதும், வெளிநாடுகளில் இந்தியாவை அவதூறு செய்வதும் அவரின் பழக்கம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in