
அம்பேத்கர் பிறந்த நாளை மத்திய அரசின் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தொல்.திருமாவளவனின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இனி அம்பேத்கர் பிறந்த நாள் விடுமுறை நாள் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் நடந்தபோது, கடந்த 25-ம் தேதி அதில் பங்கேற்றுப் பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அப்போது, "அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும். அம்பேத்கர் பவுண்டேசனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சமூக நீதியை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றால் அம்பேத்கர் பவுண்டேசன் இயங்க வேண்டும். பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை தீர்மானித்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். சமூகநீதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் செய்வோருக்குத் தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், வருகிற 14.4.2022 அன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொல்.திருமாவளவனின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரத்தில், நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாஜக அரசுதான் அம்பேத்கருக்கு உரிய மரியாதையை வழங்கிவருகிறது. காங்கிரஸ் கட்சியோ, நேரு குடும்பத்தினரைத் தவிர மற்ற தலைவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கத் தவறிவிட்டது என்று பாஜகவினர் விமர்சிக்கிறார்கள்.