`இதே நாளில் ஜெயலலிதாவின் கர்வத்தை உடைத்தோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்தும் அரசு ஊழியர்கள் சங்கம்

`இதே நாளில் ஜெயலலிதாவின் கர்வத்தை உடைத்தோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்தும் அரசு ஊழியர்கள் சங்கம்

அரசு ஊழியர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடங்கியது 2003-ம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள். அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது வரை சென்றது. அதனை எல்லாம் நினைவு கூறும் அரசு ஊழியர்கள் இந்த நாளில் தற்போதைய முதல்வருக்கு அவற்றை நினைவு கூறுவோம் என்ற வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த பதிவுகள்...

2002-ம் ஆண்டு முதற்கட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரத்து, பொங்கல் போனஸ் ரத்து, தொகுப்பூதிய முறை மற்றும் வேலை நியமன தடை சட்டம் போன்றவைகளை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மூலம் ஜெயலலிதா அமல்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து 2003-ம் ஆண்டு மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் ஐந்து அரசாணைகள் வழியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு பணப்பயன் நிறுத்தம், ஓய்வூதிய பணப்பயன்களை பத்திரமாக வழங்குதல் என்ற நிலை ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் ஆசிரியர் அமைப்புகள் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற பேரமைப்பு உருவாக்கப்பட்டு 2002-ம் ஆண்டு தொடங்கிய தொடர் போராட்டங்களின் தொடர்ச்சியாக 2003-ம் ஆண்டு மேலும் வீறுகொண்டு ஜூலை- 2 முதல் தன்னெழுச்சியோடு தொடங்கியது.

போராட்டத்தினை ஒடுக்கிட அன்றைய ஜெயலலிதா அரசு டெஸ்மா உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறை சட்டங்களை இயற்றி பல்வேறு வகையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் கைது, டிஸ்மிஸ் மற்றும் பல்வேறு குற்ற பிரிவுகளில் வழக்கு, குறிப்பாக பெண்கள் மீது அபண்டமான புகார்களை சுமத்தி பாலியல் பிரிவில் வழக்கு அன்றைய அரசால் மனிதாபிமானமற்ற முறையில் தொடுக்கப்பட்டது.

போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்கட்சி தலைவர் கலைஞர் மற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் மீது டெஸ்மா பிரிவில் வழக்கு போடப்பட்டது. ஒரே கையெழுத்து மூலம் 1,75,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட வரலாறு. அதேபோன்று 6,500 க்கும் மேற்பட்டவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்திடும் உத்தரவு.

அனைத்து அடக்குமுறைகளையும் கடந்து உறுதியுடன் நடைபெற்ற தொடர் போராட்டத்தின் விளைவு அடுத்து வந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிரொலித்தது. இரும்பு மனுஷி என்ற கர்வம் உடைக்கப்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு அகற்றப்பட்டது. வேலை நியமனம் தடை சட்டம் அகற்றப்பட்டது.

பறிக்கப்பட்ட அத்தனை உரிமைகளும், நிரந்தர பணி நீக்கம் உள்ளிட்ட அத்தனையும் உறுதியான போராட்டங்கள் மூலம் மீட்டெடுக்கப்பட்டன.

எனவே ஜூலை 2 -2003 எழுச்சியுடன் தொடங்கிய வேலை நிறுத்த போராட்டத்தினை நினைவு கூறும் வகையிலும், இன்று நாம் சந்தித்து வரும் உரிமைகள் பறிப்புகளை மீட்டிடவும், தமிழக முதல்வருக்கு கடந்த கால போராட்ட நினைவுகளை நினைவு கூறவும் இன்றைய தினம் எழுச்சி நாள் கருத்தரங்களை சிறப்புடன் நடத்திடுவோம்" என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in