விமானம் மூலம் தப்பிச் செல்லும் முயற்சி தோல்வி: கடல் மார்க்கமாக கோத்தபய ராஜபக்ச வெளிநாடு தப்புவதற்குத் திட்டம்

விமானம் மூலம் தப்பிச் செல்லும் முயற்சி தோல்வி: கடல் மார்க்கமாக கோத்தபய ராஜபக்ச வெளிநாடு தப்புவதற்குத் திட்டம்

இலங்கையை விட்டு கடல் மார்க்கமாக நாட்டை விட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளியேற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுதந்திரத்திற்குப் பின்னர் வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கு கூட அந்நிய செலாவணி போதுமானதாக இல்லாத அளவிற்கு இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.

இலங்கையின் இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அரசு தவறாக நிர்வகிப்பதாக குற்றம் சாட்டி அவரை பதவியில் இருந்து உடனே விலக வலியுறுத்தி நாடு முழுவதும் அலை அலையாக மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்படி நாளை (ஜூலை 13) அவர் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமையன்று கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். அந்த இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றுவதற்கு முன்பே அங்கிருந்து கோத்தபய தப்பிச் சென்றார்.

கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்ற கோத்தபய ராஜபக்ச நேற்று மாலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குத் திரும்பினார். ஆனால், விமானப் பயணிகளின் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு விமானம் வழியாக வெளியேறும் அவரின் முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவையும், அவரது குடும்பத்தினரையும் கடற்படை ரோந்துக் கப்பல் மூலம் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து அவரது நெருங்கிய ராணுவ உதவியாளர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் வாயிலாக கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாற்று நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in