கோபாலகிருஷ்ண காந்தியும் பின்வாங்கினார்: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார்?

கோபாலகிருஷ்ண காந்தியும் பின்வாங்கினார்: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார்?

மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி, நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கான கோரிக்கையை நிராகரித்தார்.

இது தொடர்பாக கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக என்னை நினைத்து மரியாதைக்குரிய பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்ததன் மூலம், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஒருமித்த தேசிய கருத்தையும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான சூழலையும் உருவாக்கும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். என்னை விட இதை இன்னும் சிறப்பாகச் செய்பவர்கள் இருப்பார்கள் என்று நான் உணர்கிறேன். எனவே அத்தகைய ஒருவருக்கு வாய்ப்பளிக்குமாறு தலைவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்

ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வாய்ப்பை நிராகரித்துள்ள சூழலில், கோபாலகிருஷ்ண காந்தியும் இந்த வாய்ப்பினை நிராகரித்துள்ளார்.

கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. ஆனால் இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார் என முடிவெடுக்க இயலவில்லை.

இந்த சூழலில் நாளை நடைப்பெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பொது வேட்பாளரை முடிவு செய்ய இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் ஜூன் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in