பொன்விழா ஆண்டு : தமிழ்நாட்டுக்கு அதிமுகவின் தேவை என்ன?

பொன்விழா ஆண்டு : தமிழ்நாட்டுக்கு அதிமுகவின் தேவை என்ன?

17 அக்டோபர் 1972. திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர், அண்ணா திமுகவை தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள். தந்தை பெரியாரின் திகவில் இருந்து பிரிந்து திமுகவை உருவாக்கி, அதற்கென கொள்கை, கோட்பாடு, லட்சியங்களை உருவாக்கி நெருப்பு போல வேலை செய்த செயல்வீரர்களின் உதவியுடன் அதை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அண்ணாவுக்கு ஆனது 18 ஆண்டுகள். ஆனால், கொள்கையைச் சொல்லாமலேயே கட்சி தொடங்கி, ஐந்தே ஆண்டுகளில் அதிமுகவை அரியைணை ஏற்றிய தேர்ந்த அரசியல்வாதி எம்ஜிஆர்.

அடுத்த வாரம் அதிமுக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு எடப்பாடி பழனிசாமி அணி ஒரு பக்கமும், சசிகலா அணி இன்னொரு பக்கமும் தீரம் காட்டுகின்றன. அதிமுகவின் வரலாற்றைப் பார்த்தால் ஒன்று புரியும். எப்போதெல்லாம் அந்தக் கட்சியில் ஒற்றுமை குறைந்ததோ அப்போதெல்லாம் அந்தக் கட்சி ஆட்சியை மட்டுமல்ல, தொண்டர்களையும், நிர்வாகிகளையும் இழந்திருக்கிறது. இதோ இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது அதிமுக. இங்கே திராவிடக் கட்சிகளை அழித்து ஒழிப்பதே லட்சியம் என்ற நோக்கத்தோடு அரசியல் செய்பவர்கள், ஒரு கட்சியாவது ஒழியப்போகிறதே என்று நெஞ்சம் நிறைந்த பூரிப்புடன் அதிமுகவின் சிதைவை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உன் எதிரியைச் சொல், உன் செயல்திட்டத்தைச் சொல்கிறேன்...

கடந்த 55 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளால் தமிழகம் அழிந்துவிட்டதாக பாஜக திரும்பத் திரும்ப குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, எச்.ராஜா மண்ணை வாரித் தூற்றுகிறார். "அந்த 55 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆண்டது நாம். கூட்டணிக் கட்சியான நம்மை ஏன் இந்த பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்?" என்று அப்பிராணியாக சில அதிமுகவினர் கேட்கிறார்கள். இங்கே ஆள்வது யாராக இருந்தாலும், எதிர்த்து நின்று அரசியல் செய்வோரைப் பலவீனப்படுத்தவாவது அவர்களின் அரசியலையும் ஒரு ஆளுங்கட்சி செய்தே ஆக வேண்டியதிருப்பது தேர்தல் அரசியலில் இருப்பவர்களுக்குத் தெரியும்.

அறிஞர் அண்ணா முதல்வரானபோது, "அய்யய்யோ, இனவாதம் பேசுகிற, பிரிவினை வாதம் பேசுகிற ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கிறதே... தமிழ்நாடு என்னாகுமோ?" என்று அன்றைய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸார் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்கள். அவர்களின் உண்மையான நோக்கம் திமுக ஆபத்தான கட்சி என்று மக்களைப் பயமுறுத்துவதுதான் என்பதைப் புரிந்துகொண்ட முதல்வர் அண்ணா, காங்கிரஸ் எதை எதிர்பார்க்கிறதோ அந்த மாதிரியான நிகழ்வுகளோ, அப்படியான குற்றச்சாட்டுகளோ எழாதவாறு கவனமுடன் ஆட்சி நடத்தினார். அண்ணாவின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து முதல்வரான கருணாநிதியும் கூட, தன்னைப் பற்றி பிரதமரிடம் தவறான தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதை அறிந்து “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்றார்.

இவ்வளவு ஏன் 18 ஆண்டு காலம் எம்ஜிஆர் முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எதை அரசியலாக்குகிறாரோ அதையொட்டித்தான் எம்ஜிஆரின் நடவடிக்கைகளும் இருந்தன. “இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகள் மக்களிடையே நிலவும் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே வழிவகுக்கின்றன. இத்தகைய கட்சிகள் நாட்டின் தேசியப் பிரவாகத்தில் ஐக்கியமாவதே அவை செய்யக்கூடிய விவேகமான செயலாகும்” என்று 1975 செப்டம்பரில் மும்பையில் நடந்த மகாராஷ்டிர மாநில பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பேசினார் எம்ஜிஆர். அப்படிப் பேசிய அவரை, தமிழ்நாட்டை ஒரேயடியாக தேசிய நீரோட்டத்தில் கரைத்துவிடாமல் காத்தது திமுகவின் களச் செயல்பாடுகள்தான்.

தமிழகத்தில் இடஒதுக்கீட்டை 50 சதவீதமாகவும், 69 சதவீதமாகவும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மாற்றிமாற்றி உயர்த்தியதற்குக் காரணமும் திமுகதான். படித்தவர்களின் கட்சி, நகர்ப்புற மக்களின் கட்சி என்றிருந்த திமுகவை, கிராமங்களில் கவனம் செலுத்தவும், இலவச திட்டங்களை அடுத்தடுத்து அறிவிக்கவும் வைத்தது ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் என்பதையும் மறுக்க முடியாது. எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தைக் கொண்டுவந்தால், அதனுடன் முட்டையைச் சேர்ப்பார் கருணாநிதி. கலவை சாதங்களையும் கொண்டு வருவார் ஜெயலலிதா. இதுதான் தமிழ்நாட்டின் அரசியலாக இருந்தது. ஒருபோதும் அந்த சத்துணவுத் திட்டத்தை ரத்து செய்ய யாரும் முயன்றதில்லை. உழவர் சந்தையும், அம்மா உணவகமும் கூட அதற்குச் சான்றுகள்.

ஏன் தேவை அதிமுக?

இன்று தமிழ்நாட்டை ஆள்வது திமுக அரசு. எச்.ராஜாவின் பாஷையில் சொன்னால், 'கருணாநிதியைவிட டேஞ்சரான ஆளான ஸ்டாலின்' தமிழ்நாட்டை ஆள்கிறார். ஆனால், இந்த அரசில் எந்தத் துறை படு சுறுசுறுப்பாக இயங்குகிறது? இந்து சமய அறநிலையத் துறை. கடந்த 50 ஆண்டுகளாக கதர் கிராமத் தொழில்கள் அமைச்சகம், பால்வளத் துறை அமைச்சகம் போல செயல்பட்ட இந்தத் துறை இன்று இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கக் காரணம் யார்? திமுகவை எதிர்த்து களத்தில் வீரியமாக நிற்கிற பாஜக. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் இன்று உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது அதிமுக அல்ல, பாஜக தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எப்போதுமே போட்டி எங்களுக்கு இடையேதான், வெளியாட்களுக்கு இங்கே வேலையே இல்லை என்பதுதான் திமுக, அதிமுகவின் கூட்டுச் செயல்பாடாக இருந்தது. திமுகவைப் பிடிக்காதவர்கள் எல்லாம் அதிமுகவை ஆதரிப்பார்கள். அவ்வளவுதான் அரசியல். காரணம், இங்கே திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகவுக்கே உண்டு. அதிமுகவை வீழ்த்தும் திறன் திமுகவுக்கே உண்டு.

அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராகப் பேசுவதையே முழுநேர அரசியலாக அதிமுக கொண்டிருந்தாலும், மக்கள் மத்தியில் திமுகவின் அந்தக் கருத்துக்கே செல்வாக்கிருப்பதை உணர்ந்துகொண்டால், அடுத்த கணமே அதைத் தன்னுடையதாக்கிக் கொள்ளும் பண்பு அதிமுகவுக்கு உண்டு.

திராவிடச் சித்தாந்தத்தில் ஒரு கட்சி வீரியமாகவும், ஒரு கட்சி கொஞ்சம் மென்மையாகவும் இருந்தாலும்கூட இரண்டுமே திராவிட சித்தாந்தங்களுக்குச் செய்துள்ளவை ஏராளம். இன்று அந்த நிலை மாறுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவுக்குள் நடந்த பதவிப்போட்டியைச் சாதகமாக்கிக் கொண்டு பாஜக உருவாக்கிய ஏற்பாடு அது. தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்தும் சக்தி, சித்தாந்த ரீதியாக அதைத் தகர்க்கும் திறன் தங்களுக்கே உண்டு என்று காட்ட முனைகிறது பாஜக. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. இப்படியே போனால் தமிழ்நாட்டில் பாஜக வளரும், இன்னொரு பக்கம் அதைக் காட்டி திமுகவும் வளரும். ஆனால், அதிமுக காணாமல் போய்விடும் அபாயமுண்டு. திமுகவை எதிர்கொள்வதற்காக எப்படி அதிமுக அரை திமுகவாக செயல்பட்டதோ, அதேபோல நாளடைவில் பாஜகவை எதிர்கொள்வதற்காக திமுகவே அரை பாஜகவாக மாறும் சூழலும் வரலாம்.

எனவே உள் முரண்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு, திமுகவுக்கு எதிராக முழுத்திறனுடன் களமாடத் தயாராக வேண்டும் அதிமுக. தேவையெனில் முரண்பட்டு வெளியேறியவர்களையும் கூட இணைத்துக் கொள்ளலாம். அதைத்தான் அண்ணாவின் ஆன்மாவும் விரும்பும். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியின் ஆன்மாக்களும்கூட அதையே எதிர்பார்க்கும்.

வெறும் சம்பிரதாயக் கொண்டாட்டங்களைத் தாண்டி, பொன்விழா ஆண்டில் புதுப் பொலிவு பெறட்டும் அதிமுக!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in