கோகுல்ராஜ் தாயார், யுவராஜ் நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

கோகுல்ராஜ் தாயார், யுவராஜ் நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், தன்னுடன் படித்துவந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்தார். கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அந்த மாணவி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அந்த இளம்பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற கோகுல்ராஜ் திடீரென மாயமானார். பிறகு நாமக்கல் மாவட்டம், கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இது தற்கொலையல்ல கொலைதான் என்பது உறுதி செய்யப்பட்டாலும்கூட, இந்த வழக்கில் உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக அரசியல் மற்றும் சமூக ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இதனால் இந்த வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து இந்த வழக்கு 2015 செப்டம்பர் 19ம் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்பட்ட சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அடுத்த மாதமே சிபிசிஐடி போலீஸில் சரணடைந்தார். அவரோடு சேர்த்து 17 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதில் சந்திரசேகரன், ஜோதிமணி ஆகியோர் விசாரணைக் காலத்திலேயே இறந்துவிட்டதால், மீதமுள்ள 15 பேர் மீது வழக்கு நடந்துவந்தது.

முதலில் நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு, மதுரை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் 9ம் தேதியே வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டனர். யுவராஜ் உள்ளிட்ட எஞ்சிய 10 பேருக்கான தண்டனை விவரத்தை மார்ச் 8ம் தேதி அறிவிப்பதாகக் கூறி நீதிபதி சம்பத்குமார் விசாரணையை ஒத்திவைத்தார். இன்று காலையில் நீதிமன்றத்தில் ஆஜரான கோகுல்ராஜின் தாயார், "எனது ஒரே மகன் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

"கோகுல்ராஜ் கொலை கொடூரமானது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர், அதுவும் பொறியியல் பட்டதாரி, தன் வகுப்புத் தோழியான வேறு சாதிப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காக கடத்திக்கொண்டு போய் நாக்கை அறுத்து, கழுத்தை வெட்டி, தலையைச் சிதைத்து கொன்றுள்ளனர். எனவே, அரிதினும் அரிதான இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பல வழக்குகளையும் மேற்கோள் காட்டினார்.

குற்றவாளிகளோ, "நாங்கள் நிரபராதிகள்" என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் தீர்ப்பு சொல்லப்படும் என்று கூறி, விசாரணையை ஒத்திவைத்த சிறப்பு நீதிபதி சம்பத்குமார், மதியம் தீர்ப்பு கூறினார்.

அந்தத் தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலையின் முக்கிய குற்றவாளியான யுவராஜ், அவரது ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை. குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு ஒரு ஆயுள், 5 வருட கடுங்காவல் தண்டனை விதித்தார். சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in